

பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து வருகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பிகார் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது,
''பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஊழியர்கள் நீண்ட நாள்களாக ஓய்வூதியப் பலன்களைக் கோரி வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் ஓய்வூதியம் வழங்குகிறோம். அதோடு மட்டுமின்றி ரூ. 50 லட்சத்துக்கான காப்பீட்டு தொகையையும் அவர்கள் அனுபவிக்கலாம். தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் படித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
ஷீலா பரிஷத் தலைவர்களுக்கான தொகை ரூ. 20,000 லிருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தப்படும். துணைத் தலைவர்களுக்கான தொகை ரூ. 10,000 லிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தப்படும். ஊழியர்களுக்கு ரூ. 5,000 ஆக வழங்கப்பட்டு வரும் தொகை ரூ. 7,500 ஆக உயர்த்தப்படும். தற்போது மாநிலத்தில் 8,053 கிராம பஞ்சாயத்துகள் இயங்கி வருகின்றன.
முடி திருத்தம் தொழில் செய்வோருக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்குகிறோம். இதேபோன்று மண்பாண்டம், தச்சு வேலை செய்வோருக்கும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்'' என தேஜஸ்வி குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ‘மோந்தா’ புயல் ஒடிஸாவைத் தாக்கலாம்: 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.