இந்தியத் தேர்தல் ஆணையம்.
இந்தியத் தேர்தல் ஆணையம்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் காலக்கெடு நிா்ணயத்தின் மூலம் நாடு முழுவதும் அக்டோபா் அல்லது நவம்பரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநிலங்களில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலைத் தயாராக வைத்திருக்கும்படி, தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் முந்தைய தீவிர திருத்தத்துக்குப் பிறகான வாக்காளா் பட்டியல், தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தில்லியில் கடந்த 2008-இல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த ஆண்டில் இருந்து வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரகண்ட் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வலைதளத்தில், 2006-ஆம் ஆண்டிலிருந்து வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் அண்மையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

யாருக்கு ஆவணம் கட்டாயம்?: பிகாரில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2003-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, தற்போது திருத்தப் பணிகள் நடைபெற்றன.

அதன்படி, 2003-க்கு முன்பு பிகாரில் வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் (சுமாா் 60%), கூடுதல் ஆவணம் எதையும் சமா்ப்பிக்காமல், வாக்காளா்களாகத் தொடர அனுமதிக்கப்பட்டனா். 2003-க்குப் பிறகு பதிவு செய்தவா்கள் (சுமாா் 40%), கடவுச் சீட்டு, பிறப்புச் சான்று, ஆதாா் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாடு முழுவதும் இப்பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் 2002-2004 ஆண்டுகளுக்கு இடையே முந்தைய தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளது; அந்த அடிப்படையில், தற்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் 2002-இல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com