தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவிக்கு துபையில் சொத்துகள் இருப்பதாகவும் அவர் மூன்று நாடுகளின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போர்ட்) வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

Updated On :6 ஏப்ரல் 2026, 12:02 am

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவிக்கு துபையில் சொத்துகள் இருப்பதாகவும் அவர் மூன்று நாடுகளின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போர்ட்) வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஸ்ஸாமில் வரும் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவர் பவன் கேரா, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.

செய்தியாளர் சந்திப்பில் பவன் கேரா கூறியதாவது: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவும் அவரது மனைவி ரினிகி பூயான் சர்மாவும் பல ஆண்டுகளாக நில அபகரிப்பு, கோயில் காணிக்கைகளில் முறைகேடு செய்தல், அரசு மானியத்தில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது உங்கள் முன் நாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் இந்தியாவின் எல்லைகளைக் கடந்து வெளிநாடுகளில் உள்ள விஷயங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி சர்மா மூன்று கடவுச்சீட்டுகளை வைத்துள்ளார். அவற்றில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கடவுச்சீட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி அளிக்கப்பட்டது. அது வரும் 2031-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலாவதியாக உள்ளது. ரினிகி சர்மா வசம் ஆன்டிகுவா மற்றும் பார்படோஸ் நாட்டின் கடவுச்சீட்டும், எகிப்து நாட்டின் கடவுச்சீட்டும் உள்ளன.

ஹிமந்த விஸ்வ சர்மாவின் ஒட்டுமொத்த அரசியலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மனைவி இரண்டு முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். தேர்தலில் தோற்கும்பட்சத்தில் நம் நாட்டை விட்டுத் தப்பி ஓடுவதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்களா?

ரினிகி சர்மா, துபையில் இரண்டு சொத்துகளை வைத்துள்ளார். பலரும் வெளிநாடுகளில் சொத்து வைத்துள்ளனர். ஆனால் ஒருவர் தேர்தலில் போட்டியிடும்போது தனது கணவர் அல்லது மனைவியின் சொத்துகள் குறித்த விவரத்தை தனது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஆனால் ஹிமந்த விஸ்வ சர்மாவின் வேட்பு மனுவில் தனது மனைவிக்கு சொந்தமாக துபையில் இருக்கும் இரண்டு சொத்துகள் குறித்த விவரம் குறிப்பிடப்படவில்லை. தன் மனைவியின் சொத்துகள் குறித்த விவரத்தை அவர் குறிப்பிடத் தவறியது ஏன்?

இது தவிர ரினிகி சர்மா, அமெரிக்காவின் வையோமிங் பகுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கான பெயர்ப் பட்டியலில் ஹிமந்த விஸ்வ சர்மா தம்பதியின் பெயர்கள் மட்டுமின்றி அவர்களது மகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

போலி நிறுவனங்களை கணக்கு காட்டுவதன் மூலம் ஹிமந்த விஸ்வ சர்மா தனது பணத்தை வையோமிங்கில் குவித்து வைத்துள்ளார். இந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படுமா என்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.

ஹிமந்த விஸ்வ சர்மாவின் வேட்பு மனுவில் தகவல்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எப்போது கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்? தனது குற்றங்களுக்காக ஹிமந்த விஸ்வ சர்மா சிறைக்கு வெளியே ஒருநாள்கூட இருக்கக் கூடாது. அவரது வேட்பு மனு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பவன் கேரா கூறினார்.

அஸ்ஸாம் முதல்வர் பதிலடி

பவன் கேராவின் குற்றச்சாட்டுகளுக்குச் பதிலளிக்கும் வகையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பவன் கேரா இன்று நடத்தியுள்ள செய்தியாளர் சந்திப்பு காங்கிரஸ் கட்சியில் நிலவும் விரக்தி மனப்பான்மையையும் பதற்றத்தையும் காட்டுகிறது. இத்தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கும் திசையை நோக்கி அஸ்ஸôம் நகர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் கப்பல் மூழ்கி வருவதை உணர்த்துகின்றன.

பவன் கேரா கூறியுள்ளவை அனைத்தும் அவதூறான, சித்தரிக்கப்பட்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்களாகும். இவை அஸ்ஸாம் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளன.

எங்களுக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை எழுப்பியற்காக பவன் கேராவுக்கு எதிராக நானும் எனது மனைவியும் அடுத்த 48 மணிநேரத்தில் குற்றவியல் மற்றும் சிவில் அவதூறு வழக்குகளைத் தொடர உள்ளோம் என்று ஹிமந்த விஸ்வ சர்மா தனது பதிவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.