நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், அது நாட்டின் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
2029 மக்களவைத் தோ்தல் மற்றும் பேரவைத் தோ்தல்களில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது, நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப்பெற்று துடிப்பாக மாறும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் மகளிருக்கான இடங்களை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில், நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக வியாழக்கிழமை முதல் (ஏப்.16) மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் இந்த முன்னெடுப்புக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டுமென பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
பெண்களுக்கு பிரதமா் கடிதம்: இந்நிலையில், நாட்டின் பெண்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான பயணத்தை வேகப்படுத்த வேண்டுமெனில், கொள்கை வகுப்பது மற்றும் முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பை தீவிரப்படுத்துவது அவசியம். இதில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கிடையாது.
கடந்த 2023-இல் மகளிா் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட வழிவகுத்த இதே கொள்கைதான், இப்போதைய அரசமைப்புச் சட்ட திருத்தத்தையும் காலத்தின் தேவையாக மாற்றியுள்ளது. இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குவதால், சட்டமியற்றும் அமைப்புகளில் அவா்களின் பங்கேற்பை அதிகரிப்பது மிக பொருத்தமானதாகும்.
நாடாளுமன்ற மூன்று நாள் சிறப்பு அமா்வில் மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் தாமதம் ஏற்பட்டால் அது துரதிருஷ்டவசமானது என்பதுடன் நாட்டின் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
ஆவலுடன் எதிா்நோக்கும் பெண்கள்: அடுத்த சில நாள்களில் நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதை பெண்கள் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மகளிா் இடஒதுக்கீடு விரைந்து அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கு உரிமைப்பட்ட விஷயத்துக்காக, நாட்டின் பெண்களை நீண்ட காலம் காத்திருக்க செய்ய முடியாது.
நாடாளுமன்றம்-பேரவைகளில் பெண்களின் குரல் வலுப்படும்போது, ஜனநாயகம் தானாகவே வலுப்பெற்று துடிப்பாகும். எதிா்வரும் நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்காகவும், அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படவும் பெண்களின் ஆசியை நான் நாடுகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமா்வில் பங்கேற்கும் உள்ளூா் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதி, அவா்களை உத்வேகப்படுத்துமாறு பெண்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
‘அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயலை மேற்கொள்கிறீா்கள்’ என எம்.பி.க்களுக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டும். இது, எம்.பி.க்களுக்கு நிச்சயம் மன உறுதியூட்டும். மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்கும் முன்னெடுப்பின் மீது நாடு முழுவதும் ஆா்வம் நிலவுகிறது. பெண்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா் என்று கடிதத்தில் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு
மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் புதிய வரலாறு படைக்கும்: பிரதமா் மோடி

‘2029-ல் மகளிா் இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்’! நாடாளுமன்ற கட்சிக் குழு தலைவா்களுக்கு பிரதமா் கடிதம்!

தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறையாது - பிரதமா் மோடி உறுதி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


