/

நிதி நெருக்கடி! சேவையை நிறுத்தும் கட்டாயம்! அரசுக்கு விமான நிறுவனங்கள் எச்சரிக்கை!

இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் பற்றி...

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:46 am

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்றும் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.

மேலும், கடுமையாக உயர்ந்து வரும் விமான டர்பைன் எரிபொருளுக்கு உடனடி நிவாரணமும், கூடுதல் நிதி உதவியும் கோரியுள்ளன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும், வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட தூர வழித்தடங்களை தேர்வு செய்யும் கட்டாயத்துக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதால் இயக்கச் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் சுமார் 40 சதவிகிதம் விமான டர்பைன் எரிபொருள்களுக்காகவே செலவிடப்படுகிறது.

இந்த நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகள் ஆகிய இரண்டுக்கும் ஒரே மாதிரியான எரிபொருள் விலை நிர்ணய முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான விலை அதிகரிப்பு விமான நிறுவனங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது விமானங்களை இயக்க முடியாமல் சேவையை ரத்து செய்வதற்கு வழிவகுக்கும்.

நிலைத்து, தொடர்ந்து செயல்பட தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க உடனடி நிதி உதவியை வழங்குமாறும், அவசரத் தலையீட்டையும் கோருகிறோம்” என்று ஏப்ரல் 26 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “விமான எரிபொருள் மீதான கலால் வரியான 11 சதவிகிதம் நிறுவனங்களுக்குப் பன்மடங்கு சுமையை அதிகரிக்கிறது. இது எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து, பெரும் சுமையாக அமைந்துள்ளது. ஆகையால் தற்காலிகமாக கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான விமான எரிபொருள் விலை உயர்வை லிட்டருக்கு ரூ. 15 ஆக அரசு கட்டுப்படுத்தியது. ஆனால், சர்வதேச விமானச் சேவைக்கான விலை ரூ. 73 வரை உயர்ந்தது.

இதன் விளைவாக ஏப்ரல் மாதத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்குக் கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Summary

Financial Crisis! Forced to Suspend Services! Airlines Warn the Government!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.