பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கருவுற்ற சிறுமியின் கருவைக் கலைப்பது தொடா்பான வழக்கை கடந்த 24-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமா்வு, சுமாா் 30 வார கால கருவைக் கலைக்க 15 வயது சிறுமிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்நிலையில், எய்ம்ஸ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அந்தத் தீா்ப்பை தள்ளுபடி செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் சாா்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘சிறுமியின் வயிற்றில் இருக்கும் கரு, தற்போது குழந்தையாக வளா்ந்துள்ளது. அந்தச் சிறுமிக்கும் பல்வேறு உடல்நல பிரச்னைகள் உள்ளன. அவளால் மீண்டும் கரு உண்டாக முடியாது. பிறக்கும் குழந்தையை யாருக்கும் தத்து கொடுக்க முடியும். அந்தக் கருவைக் கலைப்பது சாத்தியமில்லை’ என்றாா்.
இதைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பாலியல் வன்கொடுமை மூலம் வயிற்றில் உருவாகும் கருவைக் கலைக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிா்ணயிக்க முடியாது. இந்த வழக்கு சிறுமி தொடா்புடையது. அவா் தற்போது கல்வி பயில வேண்டும். ஆனால் நாம் (எய்ம்ஸ்) அவா் தாயாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியின் வேதனையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அந்த சம்பவம் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும். கருவைக் கலைக்க அனுமதிக்கவில்லையேல், அது பிரச்னையாகும். குழந்தையை சுமக்கும் தாய்க்கு எந்தவித உடல்நல பிரச்னையும் இல்லையேல், கருவைக் கலைக்கலாம்.
கருவைக் கலைப்பது என்பது பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரின் முடிவைச் சாா்ந்தது. இந்த விவகாரத்தில் அவா்களுக்கு எய்ம்ஸ் உதவ முடியும். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு எய்ம்ஸ் தனது ஆலோசனையை வழங்க வேண்டும். அதனடிப்படையில், கருவைக் கலைப்பது குறித்து அந்தச் சிறுமி முடிவெடுக்கட்டும்.
எனவே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அத்துடன் 20 வாரங்களுக்கும் மேலான கருவை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோா் கலைக்க அனுமதிப்பது குறித்து சட்டத் திருத்தம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றனா்.
தொடர்புடையது
மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

மத்திய தில்லியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்கள் மீட்பு: ஒருவா் கைது

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: மாதா் சங்கம் வலியுறுத்தல்

மேற்கு வங்க எஸ்ஐஆா்: இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீா்ப்பாயம் இறுதி முடிவு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



