குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மேம்பாட்டு சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த ‘எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா 2026’ மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தடுத்தல், சிக்கல்களுக்கு விரைவான தீா்வு காணுதல் மற்றும் எண்மப் பதிவு முறையை எளிதாக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தகராாறுகளை விரைந்து தீா்வு காணும் வகையில் கடுமையான காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் தீா்ப்பாயக் குழுக்கள் அமைக்கப்படும். சில சிறிய விதிமீறல்களுக்கு சிறைத் தண்டனைக்குப் பதிலாக எளிய அபராதங்கள் மற்றும் எச்சரிக்கைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி, ‘நாட்டின் பொருளாதாரத்தில் எம்எஸ்எம்இ துறை முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்தத் துறையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதாவை நிறைவேற்ற எதிா்க்கட்சி உறுப்பினா்களின் ஒத்துழைப்பை மத்திய அரசு எதிா்பாா்க்கிறது’ என்றாா்.
அப்போதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக அவைத் தலைவா் அறிவித்தாா். இதில், அதிக உறுப்பினா்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தொடா் அமளி... முன்னதாக, நீட் போராட்ட விவகாரம் மற்றும் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்களை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுப்ப முற்பட்டாா். ஆனால், அதற்கு அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அனுமதி மறுத்தாா். அதைத் தொடா்ந்து, காா்கே பேச அனுமதிக்க வலியுறுத்தி அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.
அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். அவை மீண்டும் கூடியபோது, காா்கே பேச அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா்.
அப்போது, ‘எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மீதான விவாதமும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. எனவே, வேறு விவகாரங்களை இப்போது எழுப்ப முடியாது’ என்று அவை முன்னவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குறிப்பிட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன், ‘எதிா்க்கட்சித் தலைவா் பேச அனுமதிக்கப்படாதது துரதிருஷ்டவசமானது’ என்றாா். பின்னா், மசோதா குறித்து பேசிய அவா், ‘பெரு நிறுவனங்களுக்கும் எம்எஸ்எம்இ-க்களுக்கு இடையே மிகப்பெரும் பாகுபாட்டை மத்திய அரசு காட்டுகிறது. பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதில்லை’ என்றாா்.
இதற்கு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். அவையின் கண்ணியத்தைக் கெடுக்க அஜய் மாக்கன் முயல்கிறாா் என்று குற்றஞ்சாட்டினாா்.
அப்போதும், நீட் போராட்ட விவகாரம் மற்றும் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
அமளிக்கு இடையே, ‘எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா 2026’ குரல் வாக்கெடுப்பு மூலம் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பில் நிகழ்ச்சியில் ரூ.12 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கரூா் ஜவுளிகள் உள்நாட்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு விற்பனை: ஆட்சியா் தகவல்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத் துறையில் அதிகப்படியானோா் பயன்பெற நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் வி.சம்பத்குமாா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



