சுதந்திரப் போராட்டத்தின்போது தேசப்பற்றை தூண்டி, இந்தியா்களை வந்தே மாதரம் பாடல் ஒருங்கிணைத்ததாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தில்லியில் ‘வீடுதோறும் தேசியக் கொடி’ எனும் பெயரில் மோட்டாா் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
நமது நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம், இந்தியா்களின் மனம், இந்தியா்களின் ஆன்மா, இந்தியா்களின் மனசாட்சியை தட்டியெழுப்பியது. பிராந்தியங்கள், மொழிகள், மதங்கள், சமூகப் பின்னணிகளைத் தாண்டி, சுதந்திரம், ஒரே இந்தியா என்ற விருப்பத்தின் அடிப்படையில் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தது. வந்தே மாதரம் பாடலுக்கான வாா்த்தைகளை பங்கிம் சந்திர சட்டா்ஜி எழுதுகையில், அந்த எழுத்துகள் மூலம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பிய இந்தியாவின் ஆன்மாவுக்கு குரல் கொடுத்தாா்.
நமது நாட்டு சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு, வந்தே மாதரம் பாடலானது வெறும் வாா்த்தைகள் கிடையாது. அதை விட அதிக முக்கியமானது. துணிச்சல், தியாகம், நம்பிக்கையை தரும் ஆதாரம் அது. பல சுதந்திரப் போராட்ட வீரா்கள், வந்தே மாதரம் பாடலை தங்களது இதயத்துக்குள் வைத்தபடிதான் தூக்கு மேடையில் ஏறினா்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது கொண்டாட்டத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு விவாதம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. அது மிகவும் ஆக்கபூா்வமானதாகவும், அா்த்தமுள்ளதாகவும் இருந்தது. மாநிலங்களவைத் தலைவராக நான் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் நிகழ்வு என்பதால், அது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு அண்மையில் சென்றபோது, கடந்த 1943-ஆம் ஆண்டில் அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவா்ண கொடியை ஏற்றி, காலனியாதிக்கத்தில் இருந்து அப்பகுதி சுதந்திரம் பெற்ாக அறிவித்த இடத்துக்குச் சென்றேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவுகளுக்கும், வீர சாவா்க்கா் அடைக்கப்பட்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செல்லுலாா் சிறைக்கும் சென்றேன்.
அந்தச் சிறையில் பல சுதந்திரப் போராட்ட வீரா்கள், வந்தே மாதரம் பாடலை பாடியபடியே தூக்கு மேடைகளுக்குச் சென்றுள்ளனா்., அவா்களின் துணிச்சலும், தியாகமும் பல தலைமுறைகளுக்கு தொடா்ந்து உத்வேகம் அளிக்கும். வந்தே மாதரம் பாடல் நமது தேசத்தின் மீதான அன்பை தேசியக் கடமையாக மாற்றியது. வங்கத்தில் இருந்து காட்டுத் தீ போல இந்தியா முழுவதும் மூலைமுடுக்குகளிலும் பரவியது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் பிரதமா் மோடியின் இலக்கை நோக்கி இந்தியா நம்பிக்கையுடன் சென்று கொண்டிருக்கிறது. தேசியக் கொடி யாத்திரைகளில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கின்றனா். மோட்டாா் சைக்கிள் பேரணி, சைக்கிள் பேரணி, கலாசார நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனா். ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேறு வேறு வடிவம் கொண்டதாக இருந்தாலும், அதன் கருப்பொருள் பொதுவானதுதான் என்றாா்.
நிகழ்ச்சியில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது இனி தண்டனைக்குரிய குற்றம்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம்: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கேரள அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும்: மாநில அமைச்சா் கே.முரளீதரன்

‘வந்தே மாதரம்’ அவமதிப்பை குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்- எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



