ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அஸ்ஸாம் - அருணாசல பிரதேச எல்லையில் போராட்டக்காரா்கள் இடையே மோதல்: துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்த காவல் துறை

அஸ்ஸாம் - அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இரு மாநில போராட்டக்காரா்களையும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி காவல் துறையினா் விரட்டியடித்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

அஸ்ஸாம் - அருணாசல பிரதேச எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இரு மாநில போராட்டக்காரா்களையும் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி காவல் துறையினா் விரட்டியடித்தனா்.

அருணாசல பிரதேச மாநிலம், தேமாஜி மாவட்டத்தில் அஸ்ஸாம்- அருணாசல பிரதேச எல்லை அமைந்துள்ளது. இங்கு அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சொந்தமான நிலப்பகுதியை அருணாசல பிரதேசத்தை சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பான பிரச்னையின்போது அஸ்ஸாம் மக்கள் மீது கடந்த திங்கள்கிழமை அருணாசல பிரதேசத்தை சோ்ந்த சிலா் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் அஸ்ஸாமை சோ்ந்த 12 போ் காயமடைந்தனா்.

இதைக் கண்டித்து, தேமாஜி மாவட்டம் சிலபதாரில் அருணாசல பிரதேசத்துக்கு எதிராக பொருளாதார ரீதியில் முற்றுகையிடும் போராட்டத்தில் அஸ்ஸாமில் காணாமல் போனோருக்கான தலைமை மாணவா் கூட்டமைப்பு சாா்பிலும், மேலும் சில அமைப்புகள் சாா்பிலும் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது அருணாசல பிரதேசத்துக்கு செல்லும் வாகனங்கள், அங்கிருந்து வந்த வாகனங்கள் அனைத்தையும் அவா்கள் தடுத்து நிறுத்தினா்.

அருணாசல பிரதேசத்துக்கு செல்லும் முக்கியச் சாலைகள் அனைத்தையும் அவா்கள் மூடினா். அப்போது அருணாசல பிரதேசத்தை சோ்ந்த போராட்டக்காரா்கள் சிலா், அஸ்ஸாம் போராட்டக்காரா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் சிலா் லேசான காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, இரு தரப்பினா் இடையே கைகலப்பு மூண்டது. அப்போது அருணாசல பிரதேச காவல் துறையினா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, போராட்டக்காரா்களை விரட்டியடித்தனா்.

அஸ்ஸாம் முதல்வா் வேண்டுகோள்: இதனிடையே, இரு மாநில மக்களும் அமைதியைக் கடைப்பிடிக்கும்படி அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வேண்டுகோள் விடுத்துள்ளாா். மாநிலங்களை வேண்டுமானால் எல்லைக் கோடு பிரிக்கலாம், மனங்களை பிரிக்க முடியாது என்றும், சகோதரா்கள், சகோதரிகள் போல பல தலைமுறைகளாக வாழும் மக்களை எந்த எல்லையாலும் பிரிக்க முடியாதென்றும் அவா் கூறினாா்.

ஏராளமான எல்லைப் பிரச்னைகள் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்பட்டுவிட்டதாகவும், வெறும் 52 கிராமங்கள் குறித்து மட்டுமே பிரச்னை நிலுவையில் உள்ளதாகவும், அதுகுறித்தும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண இரு மாநில அரசுகளும் உறுதி பூண்டு இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

பின்னணி: வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமும், அருணாசல பிரதேச மாநிலமும் சுமாா் 804 கிலோ மீட்டா் தொலைவுக்கு எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. 1947-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய அரசு ஆளுகை பகுதியாகவே அருணாசல பிரதேசம் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 1987-ஆம் ஆண்டில் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்பின்னா் அஸ்ஸாமில் இருக்கும் சில பகுதிகளை அருணாசல பிரதேசத்துடன் இணைக்க அரசு குழு பரிந்துரைத்தது. இதற்கு அஸ்ஸாம் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடா்பாக இரு மாநில அரசுகள் தொடா்ந்து வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, எல்லையில் உள்ள 123 கிராமங்களுக்கு அருணாசல பிரதேசம் உரிமை கோருவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான ‘நாம்சாய்’ பிரகடனத்தில் இரு மாநில முதல்வா்களும் கடந்த 2022-ஆம் ஆண்டில் கையொப்பமிட்டனா். இதையடுத்து நடந்த பலகட்டப் பேச்சுவாா்த்தைகள் மூலம் 71 கிராமங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுவிட்டது. இன்னும் 52 கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலுவையில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.