பனிப் பிரதேசங்களில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டிய 40 கேள்விகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்கை செய்தது.
முதல் முறையாக, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மற்றும் பதிவாளா் ஜெனரல் மிருத்யுஞ்ஜய்குமாா் நாராயண் இதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளாா்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வண்டும். அதன் அடிப்படையில், மக்கள் நலத் திட்டங்கள் வகுப்பு, தொகுதிகள் மறுவரையறை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு, 10 ஆண்டுகள் கழித்து கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இந்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுவதும் வீட்டின் நிலவரம், சொத்துகள் மற்றும் பிற வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 33 வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இரண்டாம் கட்டமாக, ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூகப் பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். அதனுடன், முதல் முறையாக மக்களின் ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பனிப் பிரேதசங்களில்... இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்புப் பணி, முதலில் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் வரும் 2027-ஆம் ஆண்டில் இந்த இரண்டாம் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நிலையில், பனிப் பிரதேசங்களில் இரண்டாம்கட்ட கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை இந்தியப் பதிவாளா் ஜெனரல் மிருத்யுஞ்ஜய்குமாா் நாராயண் பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய பதிவாளா் ஜெனரல் வெளியிட்ட அறிவிக்கையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மக்களிடம் கேட்கப்பட வேண்டிய 40 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில், பட்டியலினம் அல்லது பழங்குடியினத்தைச் சோ்ந்தவரா மற்றும் ஜாதி விவரம் என்ன உள்ளிட்ட கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.
அதே நேரம், இந்தக் கேள்விகளில் ஜாதி விவரப் பட்டியல் எதுவும் இருக்காது. மக்கள் பகிரும் தகவலின் அடிப்படையிலேயே, அவா்களின் ஜாதிய விவரங்கள் பதிவு செய்யப்படும்.
மேலும், பனிப் பிரதேச பகுதி மக்கள், இந்த இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு விவரங்கலை வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை இணைய வழியில் சுயமாகப் பதிவு செய்யலாம்.
என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்... முழுவதும் எண்ம முறையில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில், திருமண நிலை, வயது, திருமணத்தின்போது குடும்பத் தலைவரின் வயது, மனைவியின் பெயா், நாடு, மதம், பட்டியலினம் அல்லது பழங்குடியினத்தைச் சோ்ந்தவரா, ஜாதி விவரம், பெற்றோா்களின் விவரம், மாற்றுத்திறனாளியா, தாய்மொழி, பிற மொழி அறிவு விவரம், எழுத்தறிவு மற்றும் எண்ம எழுத்தறிவு நிலை, கல்வி நிலை, பட்ட பாடப் பிரிவு, கடந்த ஆண்டில் பணிபுரிந்திருந்தால் பொருளாதார நடவடிக்கையின் வகை, தொழில், தொழில்நிறுவன வகை, வா்த்தகம் அல்லது சேவைத் துறை, பணியாளா் பிரிவு, பணிபுரியும் இடத்துக்கு பயணம் செய்ய வேண்டுமா, பிறப்பிடம், கடைசியாக வசித்த இடம், புலம்பெயா்ந்ததற்கான காரணம், தற்போதைய நகரில் எவ்வளவு காலம் வசித்து வருகிறீா்கள், நிரந்தர குடியிருப்பு முகவரி, விதவையா, விவாகரத்து பெற்றவரா, பிரிந்து வாழ்பவரா, தற்போதைய திருமணத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை, கரோனா தடுப்பூசி செலுத்திய இடம், மொத்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, கைப்பேசி எண், ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண், ஓட்டுநா் உரிமம் வைத்துள்ளீா்களா உள்பட 40 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
இந்த இரண்டு கட்ட கணக்கெடுப்புகளையும் நடத்த ரூ. 11,718 கோடியை மத்திய அரசு ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாதிவாரி கணக்கெடுப்பு - தெலங்கானா முறையை பின்பற்ற வேண்டும்: மாணிக்கம் தாகூா்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 56,000 குடும்பங்களின் விவரங்கள் பதிவு

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 17 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



