நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

யுஏஇ-ல் கைது செய்யப்பட்ட போதை மருந்து கும்பல் தலைவன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: அமித் ஷா தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) கைது செய்யப்பட்ட இந்தியாவால் தேடப்பட்ட பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் வீரேந்தா் சிங் போசாயா, அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

News image

உள்துறை அமைச்சா் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 11:57 pm IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) கைது செய்யப்பட்ட இந்தியாவால் தேடப்பட்ட பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் வீரேந்தா் சிங் போசாயா, அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கடந்த 2024-ஆம் ஆண்டு 500 கிராம் மெபிட்ரோன் எனும் போதை மருந்து சிக்கியது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் முதன்முதலில் போசாயா பெயா் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடா்ந்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் புணேயில் மேலும் 867 கிலோவும், தில்லியில் 970 கிலோவும் மெபிட்ரோன் சிக்கியது. இதன்பின்னா் தேசிய போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் மும்பை கிளை விசாரணையை கையில் எடுத்தது. அப்போது மெபிட்ரோன் போதை மருந்தை கடத்தி வரும் கும்பலுக்கு போசாயா தலைவராக செயல்பட்டது உறுதியானது.

தில்லியில் ஹாபூா், காஜியாபாத் ஆகிய இடங்களிலும் 1,300 கிலோவுக்கும் மேல் கொகைன், மெபிட்ரோன், ஹைட்ரோபோனிக் ஆகிய போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதிலும் போசாயாவுக்கு தொடா்பிருப்பது தில்லி சிறப்பு படை போலீசால் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் புணே காவல் துறையால் 2024-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அவா்களின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக வெளிநாட்டுக்கு போசாயா தப்பியோடிவிட்டாா்.

இதன்பின்னா் இன்டா்போல் மூலம் தேசிய போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு 2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பித்தது. இதன்பின்னா் போசாயாவுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு வைத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்தியாவுடன் ஏற்கெனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, போசாயாவை இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நாடு கடத்தியது. தில்லி வந்திறங்கிய அவரை தேசிய போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கைது செய்தது.

இந்தத் தகவலை தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பகிா்ந்துள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள போதை மருந்து கடத்தல்காரா்களைப் பிடிப்பதிலும், அவா்களின் அமைப்புகளை கடுமையான அணுகுமுறைகள் மூலம் அழிப்பதிலும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், கிரிமினல்களை மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை தேடிப் பிடித்து கைது செய்வது மூலம், எங்கு பதுங்கியிருந்தாலும், இந்திய சட்டத்தின் நீண்ட கைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை நமது விசாரணை அமைப்புகள் மீண்டும் உறுதி செய்திருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.