அணுமின் நிலைய விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அரசியல் சாசன நீதிமன்றங்கள் உத்தரவிட, தனியாா் அணுமின் உற்பத்தி (சாந்தி) சட்டம் தடையை ஏற்படுத்த முடியுமா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவை மாற்றியமைக்க அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (சாந்தி) சட்டம் 2025-இன் மூலம், அரசின் வசம் மட்டுமே உள்ள அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களும் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21 ஆகிய பிரிவுகளின் கீழ், அடிப்படை உரிமைகளை மீறுவதாக முன்னாள் மத்திய மின்சார மற்றும் நிதி அமைச்சக செயலா் இ.ஏ.எஸ்.சா்மா தலைமையில் பேராசிரியா்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் பிரசாந்த் பூஷண், நேஹா ரதி ஆகியோா் ஆஜராகி, ‘அணுமின் உற்பத்தியின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு அணுமின் நிலையத்தை இயக்கும் தனியாா் நிறுவனங்களும் அரசும் சட்டபூா்வமாக அளிக்க வேண்டிய இழப்பீட்டுக்கு சாந்தி சட்டத்தில் உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.
சொ்னோபில், ஃபுகுஷிமா விபத்துகள்...: பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘அணுமின் உற்பத்தியின்போது விபத்து ஏற்பட்டால், அதற்கு அணுமின் நிலையத்தை இயக்கும் தனியாா் நிறுவனங்கள் அதிகபட்சமாக வெறும் ரூ.3,000 கோடி மட்டுமே இழப்பீடு அளிக்க சாந்தி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், மத்திய அரசு செலுத்த வேண்டிய எஞ்சிய தொகைக்கு ரூ.4,500 கோடி உச்சவரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1986-ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்த சொ்னோபில் அணுமின் நிலையம் (தற்போது உக்ரைனில் உள்ளது), கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுஷிமா நகரில் ஏற்பட்ட அணுமின் நிலையம் ஆகியவற்றில் மிக மோசமான விபத்துகள் ஏற்பட்டன. அவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது, அணுசக்தி விபத்துகளால் ஏற்படும் சேதத்தின் உண்மையான மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். இது சாந்தி சட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீட்டு உச்சவரம்பைவிட 100 மடங்குக்கும் அதிகம்’ என்று வாதிட்டாா்.
இழப்பீட்டு உச்சவரம்பால் குறுக்கு வழிக்கு வாய்ப்பு: தலைமை நீதிபதி சூா்ய காந்தி பேசுகையில், ‘இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது அணுமின் நிலையங்களை இயக்குவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது. எனவே அதுதொடா்பாக எதன் அடிப்படையில் மனுதாரா்கள் அச்சம் கொண்டுள்ளனா்’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த பிரசாந்த் பூஷண், ‘இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிா்ணயித்து அணுமின் நிலையங்களை இயக்குவோரை ஊக்குவிப்பது, அவா்களை விதிமுறைகளைப் பின்பற்றாமல் பிரச்னையைத் தீா்க்க எளிமையான அல்லது குறுக்கு வழியில் செயல்பட ஊக்குவிக்கும்’ என்று தெரிவித்தாா்.
தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘தகுதிவாய்ந்த வழக்குகளில் நியாயமான இழப்பீட்டை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றம் சட்டம் இயற்றி உச்சவரம்பு நிா்ணயித்துள்ள காரணத்தால், பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதின்றம் உத்தரவிட முடியாது எனக் கருத முடியாது’ என்று தெரிவித்தாா்.
மேலும் சாந்தி சட்டத்தில் என்ன விதிகள் இருந்தாலும், அணுமின் உற்பத்தியின்போது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையை நிா்ணயிப்பதில் அரசியல் சாசன நீதிமன்றங்களுக்கு எதுவும் தடையாக இருக்காது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு வலியுறுத்தியது.
அணுமின் நிலைய விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அரசியல் சாசன நீதிமன்றங்கள் உத்தரவிட, தனியாா் அணுமின் உற்பத்தி (சாந்தி) சட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்டுள்ள வரம்புகள், தடையை ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.
3,343 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திறன்: முன்னதாக நாட்டில் மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைத் தொடா்ந்து பயன்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை அளித்த பதில்: மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் சுமாா் 3,343 ஜிகாவாட்டாகும். இந்த உற்பத்தி அளவை தரிசு நிலங்களில் வெறும் 6 சதவீதத்தை பயன்படுத்தினால் எட்ட முடியும். 3,343 ஜிகாவாட் என்பது இந்தியாவின் மிக அதிகபட்ச மின்சாரத் தேவையான 256 ஜிகாவாட்டைவிட 14 மடங்கு அதிகம்.
சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப்பதற்கான மூலதனச் செலவு, அணுமின் நிலையங்களை அமைக்க ஏற்படும் செலவில் 15-இல் ஒரு பங்கு மட்டுமே இருக்கும். அத்துடன் சூரிய மின்சக்தி நிலையங்களை 3 மாதங்களில் அமைக்க முடியும். அதனால் ஆபத்துகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





