
நரேந்திர மோடி மீன் சந்தை: வெள்ளைத் துணியால் பெயர் மூடப்பட்டதால் மீண்டும் சர்ச்சை!
குஜராத்தில் மீன் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டது பற்றி...

மீன் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அது வெள்ளைத் துணியால் தற்போது மூடப்பட்டிருப்பது மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மீன் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் அது வெள்ளைத் துணியால் தற்போது மூடப்பட்டிருப்பது மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மீன் சந்தைக்கு ‘ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த மீன் சந்தை’ என பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
சூரத்தின் நான்புரா லக்கோட் பகுதியில் ரூ. 3.90 கோடி செலவில் சமீபத்தில் இந்த மீன் சந்தை கட்டப்பட்டது. அந்த மீன் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அங்குள்ள வியாபாரிகள் வைத்துள்ளனர். மீன் சந்தையில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
பிரதமர் நரேந்திர மோடி தீவிர சைவ உணவாளர் என்பதால், அவரது பெயரை அசைவ மீன் விற்பனை சந்தைக்கு வைப்பது பொருத்தமானதல்ல என்றும், இது அவரது பெயருக்கு களங்கள் விளைவிப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதுபற்றி, சூரத் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவட் கல்பேஷ் நவ்சாரிவாலா கூறுகையில், “பிரதமர் மீன்வளத்துறைக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். 'பிரதம மந்திரி மத்சய சம்பதா யோஜனா' போன்ற மீனவர்களுக்கு உதவும் திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். எனவே, அவரது பெயரைச் சந்தைக்கு வைப்பதில் தவறில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மோடியின் பெயர் வைக்க மாநகராட்சியிடம் யாரும் அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது. மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுச் சொத்திற்குப் பெயரிட வேண்டுமென்றால், நகராட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்த சூரத் மாநகராட்சி அதிகாரிகள், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சந்தையின் பெயர்ப்பலகையை நீக்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், பெயர்ப் பலகையைத் தாங்களாகவே அகற்றிவிடுவதாக அதிகாரிகளிடம் வியாபாரிகள் உறுதியளித்துவிட்டு பெயர்ப்பலகையை நீக்காமல் வெள்ளைத் துணியால் மூடி வைத்தனர்.
இது மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பிரதமரின் பெயரையே அந்த மீன் சந்தைக்கு வைக்க சூரத் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவட் கல்பேஷ் நவ்சாரிவாலா சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக சூரத் மாநகராட்சி நிர்வாகக்குழுத் தலைவரிடம் சங்கத்தின் சார்பில் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றிப் பேசிய நவ்சாரிவாலா, “உள்ளூர் கவுன்சிலரிடம் ஆலோசனை செய்தே பிரதமரின் பெயரை சந்தைக்கு வைத்தோம். மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை பெயர்ப்பலகை மூடியே இருக்கும். பிரதமரின் பெயரை வைக்கத் தனியே கோரிக்கை கடிதம் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மீன்வளத் துறையை மேம்படுத்த பிரதமர் கொண்டு வந்த ₹20,000 கோடி மதிப்பிலான ‘பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா’ திட்டத்தின் மூலமே, இந்தச் சந்தை அமைப்பதற்கு ரூ. 3 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியதாக வியாபாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், சாலையோரம் சுகாதாரமற்ற முறையில் மீன் விற்பனை செய்த பலரும், நல்லவிதமாக தற்போது சந்தையில் உள்ள கடைகளில் மீன் விற்பனை செய்வதால் பிரதமரின் பெயரை சந்தைக்கு வைக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Summary
Narendra Modi Fish Market: Controversy erupts again as the name is covered with a white cloth!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





