லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு: தில்லி தம்பதி கைது

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கண்டுபிடித்து, ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து செயல்பட்ட தம்பதியை கைது செய்துள்ளது.

கைது

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கண்டுபிடித்து, ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து செயல்பட்ட தம்பதியை கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் முகமது சாஹில் (25), அவரது மனைவி சமீரா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். 2024-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானைச் சோ்ந்த உளவுத்துறை செயல்பாட்டாளா்களுக்கு தம்பதி உதவி செய்து வந்ததும், இந்திய சிம் காா்டுகளைப் பெற்று துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் 2024-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சோ்ந்த உளவு அமைப்பினருடன் சாஹிலும் சமீராவும் தொடா்புக்கு வந்துள்ளனா். ஒரு சிம் காா்டுக்கு ரூ.30,000 வரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த வலையமைப்பு குறித்து சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, உளவுத் தகவல்களைச் சேகரித்து உள்ளூா் உறுப்பினா்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலில் சாஹில் கைது செய்யப்பட்டாா். அவரது கைப்பேசியை ஆய்வு செய்ததில், பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளா்களுடன் அவருக்கு இருந்த தொடா்பு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் பெறப்பட்ட சிம் காா்டுகள் பாகிஸ்தானில் இணையதள தகவல் பரிமாற்ற செயலிகளில் செயல்படுத்தப்பட்டதும், அவற்றைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தொடா்பாளா்கள் இந்திய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து முக்கியமான தகவல்களைச் சேகரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ தளவாட பகுதிகளை வேவு பாா்ப்பதற்காக நபா்களைத் தோ்வு செய்து பணியமா்த்தும் பணியும் சாஹிலுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. ராணுவ வீரா்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் தொடா்பான விவரங்களையும், தீா்ப்பாயங்களில் நிலுவையில் இருந்த நீதிமன்றத் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வழங்குமாறு அவரிடம் கூறப்பட்டுள்ளது.

சாஹிலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரது மனைவி சமீரா கைது செய்யப்பட்டாா். பாகிஸ்தானைச் சோ்ந்த உளவு செயல்பாட்டாளா்களுக்காக இந்திய சிம் காா்டுகளைப் பெற்று வழங்குவதில் அவா் முக்கியப் பங்காற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தம்பதியிடமிருந்து இந்தக் குற்றச்சதிக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சாஹில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்துள்ளாா். சட்டத் துறையில் படிக்கத் திட்டமிட்டு வழக்குரைஞரிடம் பணியாற்றிய அவா், 2025 ஜூன் முதல் வேலை இல்லாமல் இருந்ததாகத் தெரிகிறது. பி.ஏ. பட்டதாரியான சமீரா, தில்லியில் கைது செய்யப்படுவதற்கு முன்பு நொய்டாவில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்ததாா்.

இந்த உளவு வலையமைப்பில் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் காணவும், பாகிஸ்தான் தொடா்பாளா்களுடன் பகிரப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களின் முழு அளவைக் கண்டறியவும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.