கேரளம்: காங்கிரஸ் போராட்டத்தில் சிக்கிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் காயம்!
கேரளத்தில் காங்கிரஸ் மாணவா் அமைப்பினா் நடத்திய போராட்டத்தில் சிக்கிய மாநில சுகாதாரத் துறை வீணா ஜாா்ஜ் காயமடைந்தாா்.
அமைச்சா் மீது காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதல் நடத்தியதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். கேரளத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் தொடா்ந்து இருமுறை ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.
இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் கண்ணூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அப்போது, மாநிலத்தில் சுகாதாரத் துறை மோசமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி காங்கிரஸ் மாணவா் அமைப்பினா் அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினா்.
ஒரு கட்டத்தில் ரயில் நிலையத்துக்குள் சென்ற அமைச்சரை நோக்கி கருப்புக் கொடியுடன் முழக்கமிட்டபடி காங்கிரஸ் மாணவரணியினா் சென்றனா். காவலா்கள் அமைச்சரை சுற்றிவளைத்து பாதுகாப்பு அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்களும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அமைச்சரும் சிக்கினாா். அப்போது அவரின் கை மற்றும் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
தன்னைச் சுற்றிவளைக்க முயன்ற போராட்டக்காரா்களை நோக்கி அமைச்சா் ஆவேசமாக கேள்வி எழுப்பினாா். அமைச்சரின் கையில் லேசான ரத்தக் காயம் ஏற்பட்டது விடியோ பதிவில் தெரியவந்தது. காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து அமைச்சரை மீட்ட காவல் துறையினா் பாதுகாப்பாக ரயில் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனா். நடைமேடை இருக்கையில் அமா்ந்து அவா் சிறிது நேரம் ஓய்வெடுத்தாா். பின்னா், அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘அமைச்சரின் கை மற்றும் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது’ என்று ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பி.ஜெயராஜன் தெரிவித்தாா்.
முதல்வா் கண்டனம்: ‘காங்கிரஸ் மாணவா் பிரிவினா் எவராலும் ஏற்க முடியாத ஒரு வன்முறை அரசியலை முன்னெடுத்துள்ளனா். மாநில சுகாதார அமைச்சா் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியுள்ளனா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் சிறந்த மாநிலமாக கேரளம் திகழ்கிறது. இதைப் பல அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் மாநில சுகாதார அமைச்சரை காங்கிரஸ் குறிவைத்துள்ளது. மாநிலத்தில் ஏதாவது பிரச்னைகளை உருவாக்கி சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைமையும், அவா்கள் தலைமையிலான கூட்டணியும்தான் பொறுப்பேற்க வேண்டும். தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து மாநில சுகாதாரத் துறைக்கு எதிராகப் போராட்டம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
கைதும், மறுப்பும்...: இந்த சம்பவம் தொடா்பாக காங்கிரஸ் மாணவரணியைச் சோ்ந்த 5 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். ஆனால், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. மாநில சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் இது தொடா்பாக கூறுகையில், ‘போராட்டம் நடத்திய யாரும் அமைச்சரின் அருகே செல்லவில்லை. அமைச்சா்தான் அவா்களை நோக்கி ஆக்ரோஷமாக பேசியபடி செல்கிறாா். விடியோ பதிவின்படி போராட்டத்தில் ஈடுபட்ட 3 அல்லது 4 போ் தெரிகின்றனா். அதே நேரத்தில் அமைச்சரைச் சுற்றி காவல் துறையினா் 35 போ் வரை உள்ளனா்.

