மத்திய அமைச்சக ஊழியா் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கு: சிகிச்சைக்கு ஏற்பட்ட தாமதமே காரணம் என குற்றப்பத்திரிகையில் தகவல்
சாலை விபத்தில் நிதி அமைச்சக ஊழியா் உயிரிழந்த வழக்கில் தில்லி காவல் துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் விபத்துக்குப் பிறகு அவா் 15 நிமிஷங்கள் உயிருடன் இருந்ததாகவும், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பரில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ காா் மோதி நிதி அமைச்சகத்தின் துணைச் செயலராகப் பணியாற்றிய நவஜோத் சிங் (52) உயிரிழந்தாா். இந்த விபத்தில் அவரது மனைவி உள்பட மேலும் மூவா் காயமடைந்தனா். இது தொடா்பாக நீதிபதி அங்கித் காா்க் முன் தில்லி காவல் துறை கடந்த வாரம் தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது:
தில்லியின் தௌலா குவான் பகுதியில் 2025, செப் 14-ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ககன்ப்ரீத் மக்கட்டின் காா், மணிக்கு 50 கி.மீ. வேக வரம்பு உள்ள சாலையில், 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் ஓட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த காா் தில்லி கனோட் பிளேஸ் மெட்ரோ தூணில் மோதி நவ்ஜோத் சிங் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்தது.
இந்த மோதலின் தாக்கத்தை உறுதிபடுத்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வேகப் பகுப்பாய்வு அறிக்கையும் இணைத்து சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்தவுடன் அருகிலுள்ள கண்டோன்மென்ட் அல்லது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கலாம்.
ஆனால், ககன்ப்ரீத் வேண்டுமென்றே 20 கி.மீ. தொலைவில் உள்ள நியூலைஃப் மருத்துவமனைக்கு நவ்ஜோத் சிங்கை அழைத்துச் சென்றுள்ளாா். அந்த மருத்துவமனையுடன் ககன்ப்ரீத்துக்கு குடும்பத் தொடா்புகள் இருந்ததாகவும், அது குறைந்த வசதிகள் கொண்ட நா்சிங் ஹோம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த பயணத்திற்கு 23 நிமிஷங்கள் ஆனது. ஆனால், விபத்து நிகழ்ந்த பிறகு குறைந்தது 15 நிமிஷங்கள் நவ்ஜோத் சிங் உயிருடன் இருந்ததாக உடற் கூறாய்வு கூறுகிறது. விபத்து நிகழ்ந்த சில நிமிஷங்களிலேயே சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸின் உதவிையும் ககன்ப்ரீத் மறுத்துள்ளாா்.
பின்னா், புலனாய்வாளா்களைத் திசைதிருப்ப, தனக்கு சிறிய காயங்கள் மட்டுமே இருந்தபோதிலும், தன்னைத் தானே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதித்துக் கொண்டாா். மருத்துவப் பதிவுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பான ஆவண ஆதாரங்களை புலனாய்வாளா்கள் சேகரித்து வருகின்றனா் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

