பெங்களூரு பயங்கரவாத சதி வழக்கு: மருத்துவா் உள்பட மூவா் மீது குற்றப்பத்திரிகை
பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பெங்களூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி செய்த வழக்கில் மருத்துவா் உள்பட மூவா் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 ஜூலையில் பெங்களூரு நகர காவல் துறையினா் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை மீட்டனா். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா் அமைப்பினா் பெங்களூரில் பெரிய அளவில் குண்டுவெடிப்புகளை நடத்த சதி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடா்பாக தலைமறைவுக் குற்றவாளி ஜுனைத் அகமது உள்பட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி 2008-ஆம் ஆண்டுமுதல் சிறையில் இருந்து வரும் பயங்கரவாதி நசீரை நாசவேலை மூலம் விடுவிக்கும் திட்டத்திலும் இவா்கள் ஈடுபட்டு வந்தனா். நசீருக்கு வேறு பயங்கரவாத வழக்குகளில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அனீஸ் பாத்திமா, ஷான் பாஷா, மருத்துவா் எஸ்.நாகராஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2023 அக்டோபரில் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
இதில் ஜுனைத் அகமதின் தாய் அனீஸ் பாத்திமா பயங்கரவாதிகளுக்கு தகவல் பரிமாற்றம், வெடிபொருள்கள் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளாா். பெங்களூரு சிறை மருத்துவரான எஸ்.நாகராஜ், சிறைக்குள் கைப்பேசிகளைக் கடத்தி அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளாா். இதில் ஒரு கைப்பேசியை சிறையில் உள்ள பயங்கரவாதி நசீா் பயன்படுத்தி வெளியில் இருப்பவா்களுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளாா்.
காவல் துறை துணை ஆய்வாளரான ஷான் பாஷா, நசீருக்கு சிறையில் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த தகவல்களை பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளாா்.
இந்த மூவா் மீதும் பெங்களூரு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இரண்டாவது துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று என்ஐஏ கூறியுள்ளது.

