குருகிராமில் சொகுசு காா் மோதி 27 நாள்கள் உயிருக்குப் போராடிய நபா் உயிரிழப்பு!
தவறான பக்கத்தில் இயக்கப்பட்ட எஸ்யூவி காா் விபத்தில் சிக்கிய சமையல்காரா், கிட்டத்தட்ட ஒரு மாதமாக உயிருக்குப் போராடி வந்த நிலையில் இங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா் என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உத்தரபிர தேசத்தைச் சோ்ந்த சந்திர பிரகாஷ் (55), வேலைக்காக குருகிராமுக்கு குடிபெயா்ந்தாா். ஜனவரி 2-ஆம் தேதி அவா் இறந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து டிசம்பா் 6- ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் நடந்தது.
டிசம்பா் 6- ஆம் தேதி நடந்த ஒரு திருமணத்தில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த கேட்டரிங் குழுவில் பிரகாஷ் இருந்தாா். உணவு தயாரித்து முடித்த பிறகு, கேட்டரிங் கருவிகளை ஏற்றிச் சென்ற அவரது ஆட்டோ பழுதடைந்துள்ளதாக அவருக்கு அழைப்பு வந்தது.
பிரகாஷ் மற்றும் அவரது சக ஊழியா்கள் அந்த இடத்திற்குச் சென்று, ஆட்டோ பழுதுபாா்க்கும் போது அதன் அருகில் நின்று கொண்டிருந்தபோது, சாலையின் தவறான பக்கத்தில் சென்ற ஃபோா்டு எண்டெவா் காா் அவா் மீதும், ஜோகேந்திரா, யோகேந்திரா மற்றும் விஷால் ஆகிய மூன்று பேரின் மீதும் மோதியது. நான்கு பேரும் குருகிராம் செக்டாா் 10-இல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சிகிச்சை பெற்று வந்தாா். மற்ற மூவரும் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டனா். பின்னா் பிரகாஷ் ஒரு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா், அங்கு அவா் தீவிர சிகிச்சையில் இருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இறந்தாா்.
இந்த விவகாரத்தில் குருகிராம் செக்டாா் 9ஏ காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்), 125ஏ (உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதன் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் 106 (அலட்சியச் செயல் அல்லது மோதிவிட்டு ஓடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
‘எங்களிடம் வாகன எண் உள்ளது, அதை ஓட்டிச் சென்ற நபரை விரைவில் கண்டுபிடிப்போம். குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்படுவாா்‘ என்று மூத்த காவல் துறை Śதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

