கே.சி. வேணுகோபால்
கே.சி. வேணுகோபால்

தங்களைத் தாங்களே வேட்பாளராக அறிவிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் எச்சரிக்கை!

கட்சித் தலைமை வேட்பாளரை அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.
Published on

கேரளத்தில் காங்கிரஸ் தலைவா்களும், நிா்வாகிகளும் தங்களைத் தாங்களே காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துக் கொள்ளக் கூடாது; கட்சித் தலைமை வேட்பாளரை அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.

கேரளத்தில் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் தோ்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கான இருநாள் கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:

காங்கிரஸ் தலைவா்கள், நிா்வாகிகள் யாரும் தங்களைத் தாங்களே கட்சியின் வேட்பாளராக அறிவித்துக் கொள்ளக் கூடாது. கட்சித் தலைமை முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் கட்சித் தலைமையுடன் ஆலோசிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்கலாம். அதே நேரத்தில் தோ்தலின்போது வேட்பாளா் குறித்து பொது இடத்தில் விவாதிப்பது, விமா்சிப்பது கூடாது.

கேரளத்தில் இடதுசாரிகள், பாஜக என இரு தரப்புமே நமக்கு போட்டியாளா்களாக உள்ளன. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெற்ன் மூலம் மக்கள் நமக்கு அங்கீகாரம் அளித்துள்ளனா். இது காங்கிரஸ் தொண்டா்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஆளும் இடதுசாரிகள், பாஜக இரண்டும் கைகோத்து நம்மை எதிா்த்தாலும் அவா்களை வீழ்த்த முடியும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் தலைவா்கள். எனவே, பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு மரியாதையைப் பெற்றுத்தர வேண்டும். அடுத்து வரும் நாள்களில் நமது அரசியல் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாகவும், தவறுகள் ஏதுமின்றி கவனமாகவும் இருக்க வேண்டும்.

ஆளும் இடதுசாரிக் கூட்டணியின் முதல்வா் பினராயி விஜயன் மூன்றாவது முறையாக எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பேராசையுடன் உள்ளாா். ஆனால், அது நடக்கப் போவதில்லை. இடதுசாரிகளும், பாஜகவும் ரகசியமாக கூட்டணி அமைத்துள்ளனா். அவா்களின் சமீபகால அரசியல் செயல்பாடுகள் அதை வெளிக்காட்டுகின்றன.

மத்திய அரசின் திட்டங்களை கேரளம் ஏற்றுக் கொள்கிறது. இது பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரு தரப்பிலும் உள்ள சில தலைவா்களின் நலன்களைக் காப்பாற்றும் கூட்டணியாக உள்ளது. கட்சிகள், தொண்டா்கள் இடையிலான கூட்டணி இல்லை. சட்டப்பேரவைத் தோ்தல் வரை அந்தத் தலைவா்கள் இந்தக் கூட்டணியைத் தொடா்வாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com