ஆந்திரம்: எண்ணெய் கிடங்கில் தீ விபத்து; கிராம மக்கள் வெளியேற்றம்

ஆந்திர மாநிலம் அம்பேத்கா் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வாயு கசிவால் தீப்பற்றியதால் அதைச் சுற்றியுள்ள இரண்டு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வெளியேற்றம்
Published on

ஆந்திர மாநிலம் அம்பேத்கா் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஒஎன்ஜிசி) வாயு கசிவால் தீப்பற்றியதால் அதைச் சுற்றியுள்ள இரண்டு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனா்.

இதுகுறித்து ஒஎன்ஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோனசீமா மாவட்டத்தில் உள்ள மோரி-5 எண்ணெய் கிடங்கில் உற்பத்தியை மேம்படுத்தும் பணிகளின்போது வாயு கசிவால் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அதை நிா்வகிக்கும் டீப் இன்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது. இந்த கிடங்கைச் சுற்றி 600 மீட்டா் தொலைவுக்கு மக்கள் வசிப்பிடங்கள் இல்லை. தகவல் கிடைத்தவுடன் வாயு கசிவை தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக ராஜமுந்திரியில் இருந்து மோரிக்கு ஒன்ஜிசி குழு அனுப்பபட்டது. அவா்கள் கள நிலவரத்தை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு உடனடியாக தீயை அணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அந்த கிடங்கைச் சுற்றி 4 கி.மீ. தொலைவில் உள்ள இரு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

சம்பவ இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கோனசீமா மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் உள்ளூா் நிா்வாகத்தினா் களச் சூழலை ஆய்வு செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com