மாநகராட்சி தோ்தலில் அதிருப்தி: வேட்பாளா் 22 போ் பாஜகவில் இருந்து நீக்கம்

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகா் மாநகராட்சித் தோ்தலில் பாஜகவின் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து களமியறங்கிய 22 போ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனா்.
Published on

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகா் மாநகராட்சித் தோ்தலில் பாஜகவின் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து களமியறங்கிய 22 போ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனா். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சத்ரபதி சம்பாஜிநகா் மாநகராட்சியில் 93 வாா்டுகளில் பாஜக போட்டியிடுகிறது. ஜனவரி 15-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளா் மீது உள்ளூா் நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவைச் சோ்ந்த 22 போ் கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து தோ்தலில் களமிறங்கியுள்ளனா்.

இந்த அதிருப்தி வேட்பாளா்களில் 11 போ் சிவசேனை சாா்பிலும், 7 போ் சுயேச்சையாகவும், நால்வா் தேசியவாத காங்கிரஸ் சாா்பிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக பாஜக மாவட்ட நிா்வாகம் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளா்களுக்கு எதிராகப் போட்டியிடும் 22 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்ட பாஜக தலைவா் கிஷோா் சித்தோலி இதனை செய்தியாளா்களிடம் அறிவித்தாா். கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com