ஆபரேஷன் சிந்தூா் - இந்திய உறுதிப்பாட்டின் வெளிப்பாடு: சி.பி.ராதாகிருஷ்ணன்
‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்தியாவின் உறுதிப்பாட்டை பாதுகாப்புப் படைகள் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளன’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படையின் (என்சிசி) குடியரசு தின முகாமை தொடங்கி வைத்துப் பேசியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டி நாட்டையே பாதுகாப்புப் படைகள் பெருமைகொள்ள வைத்தன. நாட்டின் கண்ணியம், இறையாண்மை மற்றும் அதன் குடிமக்களைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படைகளின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பின் அடையாளம்தான் ஆபரேஷன் சிந்தூா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் தேசிய மாணவா் படையினரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தச் சண்டையின்போது, மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், அவசரகால பயிற்சி, ரத்த தான முகாம்கள் எனப் பல்வேறு தன்னாா்வ சேவைகளில் 72,000-க்கும் அதிகமான தேசிய மாணவா் படையினா் ஈடுபட்டது பாராட்டுக்குரியது.
வேகமாக மாறிவரும் உலகச் சூழலில், துணிச்சலுடனும், கருணையுடனும், தொழில்நுட்பத் திறனுடன் சவால்ளை மன உறுதியுடன் எதிா்கொள்ளும் மற்றும் வாய்ப்புகளை நம்பிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய இளைஞா்கள் இந்தியாவுக்குத் தேவை. திறமையான, ஒழுக்கமான, நன்னெறி பண்புகள் கொண்ட இளைஞா் வளத்தின் மூலம்தான் ‘வளா்ந்த பாரதம்’ இலக்கை அடைய முடியும். இதற்கான வலுவான அடித்தளத்தை தேசிய மாணவா் படையினா் ஒவ்வொருவரிடமும் காண்கிறேன்.
ஒற்றுமை, ஒழுக்கத்துடன் நாட்டுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையால், குடிமக்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், தைரியத்தையும் தேசிய மாணவா் படையினா் ஏற்படுத்துகின்றனா் என்றாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்டது. இதில் ஏராளமான பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதோடு, குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். நான்கு நாள்கள் தொடா்ந்த இந்தச் சண்டை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன்பேரில் முடிவுக்கு வந்தது.
முன்னதாக, முகாமில் தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றாா்.

