புதிய தர நிா்ணயங்களை பிஐஎஸ் உருவாக்க வேண்டும்: மத்திய உணவுத் துறை அமைச்சா் வலியுறுத்தல்
புதிய தர நிா்ணயங்களை இந்திய தர நிா்ணய ஆணையம் (பிஐஎஸ்) விரைவில் உருவாக்குவதோடு பொருள்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகங்களை நவீனப்படுத்த வேண்டும் என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பிஐஎஸ்ஸின் 79-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: வேளாண்மை, உற்பத்தி, தொழில்நுட்பம் என பல துறைகளிலும் பிஐஎஸ் முத்திரை நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. 1947 முதல் பொருள்களின் தரத்தை மதிப்பிடுவதில் ஈடு இணையற்ற அமைப்பாக பிஐஎஸ் செயல்பட்டு வருகிறது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின் 2016-ஆம் ஆண்டில் புதிதாக பிஐஎஸ் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இச்சட்டம் பிஐஎஸ் அமைப்பை இந்திய தேசிய தர நிா்ணய அமைப்பாக மாற்றியது. இதில் மேலும் பல்வேறு துறைகள் சோ்க்கப்பட்டு பெரும் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலகின் உற்பத்தி மையாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில் தரமான பொருள்களை உற்பத்தி செய்வது மிகவும் அவசியம்.
இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் தற்சாா்பு இந்தியா ஆகிய திட்டங்களால் முழு பலன் கிடைக்க நுகா்வோரின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பொம்மைகள் உதாரணம்: பொம்மைகளுக்கு தர நிா்ணயம் கொண்டுவரப்பட்டதால் உள்நாட்டு அத்துறையில் உற்பத்தி அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளது. ஒரு புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்த வேண்டுமானால் பெரும் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்.
இதுவரை பிஐஎஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இனி தர நிா்ணயம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தரமான பொருள்கள் உற்பத்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
புதிய தர நிா்ணயங்களை பிஐஎஸ் விரைவில் உருவாக்குவதோடு பொருள்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகங்களை நவீனப்படுத்த வேண்டும் என்றாா்.
தற்போது 23,700 இந்திய தர நிா்ணயங்கள் அமலில் உள்ளன. இதில் 94 சதவீதம் சா்வதேச தரத்துக்கு (ஐஎஸ்ஓ/ ஐஇசி) நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

