

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை கடத்திச்செல்ல அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப்ரித்விராஜ் சாவன் தெரிவித்துள்ளார்.
இன்று வெனிசுவேலா அதிபருக்கு நேர்ந்த நிலை நாளை இந்தியாவுக்கும் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ப்ரித்விராஜ் சாவன் பேசியதாவது,
''வெனிசுவேலாவில் நடந்தவை அனைத்தும் ஐ.ந. சாசனத்துக்கு எதிரானவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் கடத்தப்பட்டு மற்றொரு நாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கொள்கைகளுக்கு கட்டுப்படாதவராக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின் அதிபரை கடத்திச் செல்லும் அதிகாரத்தை அமெரிக்காவுக்கு கொடுத்தது யார்? ஐக்கிய நாடுகள் அவையும் இதே கேள்வியையே முன்வைக்கிறது.
இத்தகைய முறையற்ற செயல் நாளை எந்தவொரு நாட்டிற்கும் நடக்கலாம். இந்தியாவுக்கும் இந்த நிலை ஏற்படலாம். சர்வதேச விவகாரங்களில் மேலாதிக்கம் செலுத்த ஒரு நாட்டை நாம் அனுமதித்தால், நாம் மிகவும் மோசமான காலகட்டத்தை நோக்கிச் செல்கிறோம் என்று நினைக்கிறேன்.
வெனிசுவேலா விவகாரத்தில் இந்தியா எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. வழக்கமான முறையில் இந்தியா பேசவில்லை. ரஷியாவும் சீனாவும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
எது சரி, எது தவறு என்பதில் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல், சர்வதேச அளவிலான தனது நற்பெயரைக் காப்பதிலேயே கவனமாக இருக்கிறார் பிரதமர் மோடி. உக்ரைன் போரிலும் இதே நிலைதான். எந்த விவகாரத்திலும் ஒரு பக்கத்தில் இருந்ததில்லை. இரு பக்கமுமே சரி, இரு பக்கமுமே தவறு என்ற கண்ணோட்டம்தான்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரிலும் எந்த தரப்பிற்கும் நிற்கவில்லை. காஸாவில் உள்ள மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்படும்போதுகூட இந்தியா வாய்திறக்கவில்லை. ஏனெனில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் நரேந்திர மோடியின் நெருகிய நண்பர்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.