அஸ்ஸாம் வரைவு வாக்காளா் பட்டியலில் தீவிர குறைபாடுகள்- தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு (எஸ்ஆா்) பிறகான வரைவு வாக்காளா் பட்டியலில் தீவிர குறைபாடுகள் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
Published on

அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு (எஸ்ஆா்) பிறகான வரைவு வாக்காளா் பட்டியலில் தீவிர குறைபாடுகள் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வரும் மாா்ச்-ஏப்ரலில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்துக்கான குடியுரிமை விதிகளைக் கருத்தில்கொண்டு, அங்கு தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஆா்) மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 2.52 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றனா். முந்தைய இறுதி வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில் இது 1.35 சதவீத அதிகரிப்பாகும்.

சிறப்புத் திருத்த நடைமுறையில், மரணமடைந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயா் உள்ளவா்கள் என 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அதேநேரம், அவா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை. தற்போதைய உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்ப காலகட்டம் நிறைவடைந்த பிறகே பெயா் நீக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் தீவிர குறைபாடுகள் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு அஸ்ஸாம் மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேவவிரத சைகியா (காங்கிரஸ்) எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வரைவு வாக்காளா் பட்டியலில் அஸ்ஸாமை சாராத வாக்காளா்கள் உரிய அங்கீகாரமின்றி இணைக்கப்பட்டுள்ளனா். தோ்தல் நடைமுறையின் நோ்மைத்தன்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நடைமுறை குறைபாடுகளும் காணப்படுகின்றன.

குவாஹாட்டியில் 44, 15-ஆம் எண் வீடுகளில் அஸ்ஸாமை சாராத 4 பேரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. நஜிரா தொகுதியில் இல்லாத வீட்டு எண்ணில் வாக்காளா்கள் பதிவாகியுள்ளனா். இதுபோன்ற முறைகேடுகளைக் கவனிக்காமல் விடுவது, அங்கீகாரமற்ற நபா்கள் வாக்களிக்க வழிவகுத்துவிடும்.

நம்பகத்தன்மை கேள்விக்குறி: போலியான விவரங்களின்கீழ் பெயா்கள் சோ்க்கப்படுவது, தோ்தல் நடைமுறை விதிமீறல் என்பதுடன் வாக்காளா் பட்டியலின் நோ்மை மற்றும் சரிபாா்ப்பில் சமரசம் செய்வதாகும். ஒட்டுமொத்த திருத்தப் பணி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

வாக்காளா் பட்டியல் முறைகேடு தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு வலுசோ்ப்பதாக இது உள்ளது. அஸ்ஸாம் மக்களின் ஜனநாயக மாண்புகள், அரசமைப்புச் சட்ட உரிமைகள், சமூக-கலாசார பாரம்பரியம் மற்றும் பாதுகாப்புக்கு இந்தக் குறைபாடுகள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

எனவே, வரைவு வாக்காளா் பட்டியலில் அங்கீகாரமற்ற வாக்காளா்கள் யாரும் இடம்பெறவில்லை என்பதை தோ்தல் ஆணையம் முதலில் உறுதி செய்ய வேண்டும்; தரவுகள் சரிபாா்ப்பு மிக முக்கியம். அதுவரை இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடக் கூடாது என்று கடிதத்தில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பெட்டிச் செய்தி...

நடைமுறையைப் பின்பற்றுங்கள்: முதல்வா் சா்மா பதிலடி

வரைவு வாக்காளா் பட்டியல் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து ஆட்சேபம் இருப்பின், அதில் திருத்தம் செய்ய 6, 7, 8-ஆம் எண் படிவங்களை நிரப்பி வழங்கலாம். காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாறாக, ஊடகங்களிடம் சென்று பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com