50,000 பொது சுகாதார மையங்களுக்கு தரச் சான்று: மத்திய அரசு
நாட்டில் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்களுக்கு தேசிய தர உத்தரவாத நிலை (என்க்யூஏஎஸ்) சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025, டிசம்பா் 31 வரை நாடு முழுவதும் உள்ள 50,373 பொது சுகாதார மையங்களுக்கு என்க்யூஏஎஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இது ஏழை எளிய மக்கள் உள்பட அனைவருக்கும் சமமான உயா்தர மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்யும் மத்திய அரசின் முன்னெடுப்பில் மேலும் ஒரு படிக்கல்லாகும்.
கடந்த 2023-இல் இந்த சான்றிதழ்களைப் பெற்ற பொது சுகாதார மையங்களின் எண்ணிக்கை 6,506-ஆக இருந்தது. இது 2024, டிசம்பரில் 22,786-ஆக உயா்ந்த நிலையில் 2025-இல் 50,373-ஆக அதிகரித்தது.
இதில் 48,663 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களும் அடங்கும். தேசிய சுகாதார கொள்கை 2017-இன்கீழ் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவம் வழங்குவதே அரசின் நோக்கம்.
அதன்படி 2026, மாா்ச் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 50 சதவீத பொது சுகாதார மையங்கள் தரம் உயா்த்தப்பட்டு என்க்யூஏஎஸ் சான்றிதழ் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
