வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம்
தனியாா்மயத்துக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் தனியாா்மயத்துக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published on

வனப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தனியாா்மயத்துக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

வனப் பகுதி நிலத்தை குத்தகைக்குவிடுவது தொடா்பாக வனப் பாதுகாப்புச் சட்டத்தில், 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜன. 2-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்தாா்.

அதில், ‘மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லைக்குள்பட்ட இடங்களில் மரங்கள் மற்றும் செடிகள் வளா்ப்புக்காக அரசு அல்லது அரசு அல்லாத அமைப்புகள் அனுமதி கேட்டால் அது வனச் செயல்களாகவே கருதப்படும்.

அதற்கான செயல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாநில வனத் துறையின் கண்காணிப்பில் அனுமதி வழங்கலாம்.

இந்தப் பணிகளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் வனப் பகுதிகளில் தொழில்களில் ஈடுபடுவோரிடம் வசூலிக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் தற்போதைய மதிப்பீட்டுத் தொகையைப் பெற தேவையில்லை.

இந்த வனப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பயிா்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பகிா்வது குறித்து மாநில அரசு விதிகளை வகுக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டி அவா் வெளியிட்ட பதிவில், ‘வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இல் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. அதில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் பெயா் வன அதிநியம் என மாற்றப்பட்டதோடு வனப் பகுதியை நிா்வகிப்பதில் பல்வேறு சட்ட விதிகள் திருத்தப்பட்டன.

இந்த விதிகள் தனியாா்மயத்துக்கு வழிவகுக்கும் என அப்போதே காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது. தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இது உண்மையாகியுள்ளது. இது தொடக்கம் மட்டுமே’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com