

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் பனிச் சறுக்கில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேதாந்தா குழுமம் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்திலும் பிரபல ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகின்றது.
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராக அனில் அகர்வால் (வயது 49) செயல்பட்டு வருகிறார்.
இவர் அமெரிக்காவில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். நியூ யார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தார்.
மகனின் மரணம் குறித்து அனில் அகர்வால் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
"இன்று என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ், எங்களை விட்டு மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார். ஆரோக்கியமாகவும், வாழ்க்கை மீதும் கனவுகள் மீதும் மிகுந்த ஆர்வத்துடனும் இருந்தார்.
அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வந்தார். மோசமான நிலை கடந்துவிட்டது என்று நாங்கள் நம்பினோம். ஆனால் விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துக்கொண்டது.
தன் குழந்தைக்கு விடை கொடுக்க வேண்டிய ஒரு பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு மகன் தன் தந்தைக்கு முன்பாகப் பிரிந்து செல்லக்கூடாது. இந்த இழப்பு எங்களை நாங்கள் இன்னும் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் நொறுக்கிவிட்டது.
அக்னிவேஷ் பல பரிமாணங்களைக் கொண்டவர் - ஒரு விளையாட்டு வீரர், ஒரு இசைக் கலைஞர், ஒரு தலைவர்.
நானும் என் மனைவி கிரணும் உடைந்து போயிருக்கிறோம். இருப்பினும், எங்கள் துயரத்தில், வேதாந்தா நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் எங்கள் குழந்தைகள்தான் என்பதை எங்களுக்கு நாங்களே நினைவூட்டிக்கொள்கிறோம்.
எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் உரிய வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் சம்பாதிப்பதில் 75 சதவீதத்துக்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பித் தருவதாக அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன்.
இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.