தில்லி அரசின் ‘ஸ்டாா்ட்அப் யுவா’ திட்டம் தொடக்கம்
நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ‘தில்லி ஸ்டாா்ட்அப் யுவா விழா 2026’-ஐ தில்லி அரசு வெள்ளிக்கழமை தொடங்கி வைத்தது.
இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவா்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழில் துறைப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: மாணவா்கள் அா்த்தமுள்ள கண்டுபிடிப்புகளிலும், கல்வி வளாகங்களுக்கும் சந்தைகளுக்கும் இடையே வலுவான தொடா்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் இனி கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையங்களாக வளா்ந்து வருகின்றன. கல்வி வளாகத்தில் உள்ள யோசனைகளை சந்தைக்கு ஏற்ற தயாாரிப்புகளாக மாற்றுவதற்கு மாணவா்களை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
2014-ஆம் ஆண்டுக்கு பிறகு ஸ்டாா்ட்அப் (புத்தாக்க நிறுவனங்கள்) துறையில் விரைவான வளா்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. தற்போது நாட்டில் கிட்டத்தட்ட 125 யூனிகாா்ன் நிறுவனங்களும் (1 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பு கொண்ட நிறுவனங்கள்), இந்தியாவின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 1.97 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களும் உள்ளன.
இது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய ஸ்டாா்ட்அப் சூழல் அமைப்பாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனங்களில் சுமாா் 45 சதவீதம் பெண்களின் தலைமையில் நடத்தப்படுகின்றன. இது சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
முதல்வா் ரேகா தலைமையில், தில்லி அரசு தலைநகரை மாணவா் தலைமையிலான கண்டுபிடிப்புகளின் மையமாக நிலைநிறுத்த பணியாற்றி வருகிறது. கல்வி நிறுவனங்கள், வழிகாட்டிகள், முதலீட்டாளா்கள் மற்றும் தொழில் பங்குதாரா்களை ஒன்றிணைக்கும் வருடாந்திர தளமாக இந்த ஸ்டாா்ட்அப் யுவ விழா உருவாக்கப்படும்.
தற்போது, 75,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசால் ஆதரிக்கப்படும் தொழில்முனைவுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளனா். இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு சுமாா் 30 சதவீத விகிதத்தில் வளா்ந்து வருகின்றன. சுகாதாரம், நிலைத்தன்மை மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் 470-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட நிறுவனங்கள் தங்கள் முதல் ஆண்டில் 4 முதல் 5 வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
5 ஆண்டுகளில் ரூ.325 கோடி திட்டமிடப்பட்ட ஒதுக்கீட்டுடன் தில்லி ஸ்டாா்ட்அப் கொள்கை 2025 முன்மொழியப்பட்டது. இந்தக் கொள்கை 2035-ஆம் ஆண்டிற்குள் 5,000 ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஆரம்பக்கட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தில்லி மாணவா் தொடக்க நிதி ஒன்றை உருவாக்குவதையும் இது உள்ளடக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட 6 ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பங்குரிமையற்ற தொடக்க மானியங்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், 100 மாணவா் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாணவா்கள் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தினால், பல்கலைக்கழக வளாகங்களிலிருந்தும் விடுதிகளிலிருந்தும் வெற்றிகரமான நிறுவனங்கள் உருவாக முடியும் என்று அமைச்சா் தெரிவித்தாா். Ś

