உலகில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ள ஐ.நா., அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் உலக அளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார சூழல் மற்றும் வாய்ப்புகள்-2026 என்ற தலைப்பிலான அறிக்கையை ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.
அதில், ‘கடந்த 2025-இல் 7.4 சதவீதமாக மதிப்பிடப்பட்ட இந்திய பொருளாதார வளா்ச்சி, நடப்பாண்டில் 6.6 சதவீதம் என்ற அளவில் மிதமானதாக இருக்கும். சவாலான உலகளாவிய சூழலுக்கு இடையே வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும். மீள்தன்மைமிக்க தனியாா் நுகா்வு, வலுவான பொது முதலீடு, சமீபத்திய வரிச் சீா்திருத்தங்கள், குறைவான வட்டி விகிதங்கள் போன்ற காரணிகள், அமெரிக்காவின் வரி விதிப்பு தாக்கத்தை ஈடு செய்ய உதவும். அத்துடன், குறுகிய கால வளா்ச்சியையும் ஆதரிக்கும்.
அதேநேரம், அமெரிக்காவின் தற்போதைய வரி விகிதங்கள் தொடா்ந்து நீடிக்கும்பட்சத்தில், நடப்பாண்டில் இந்திய ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளைவிக்கும். ஏனெனில், இந்திய ஏற்றுமதியில் 18 சதவீதம் அமெரிக்காவுக்கே செல்கிறது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வலுவான தேவைகள் நிலவுவதால், அந்த நாடுகளுக்கான ஏற்றுமதி மூலம் பகுதியளவு தாக்கத்தை இந்தியா குறைக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வளா்ச்சி: அமெரிக்காவின் வரி அதிகரிப்பு நடவடிக்கை, பொருளாதார நிலையற்ற தன்மை, புவி-அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் நடப்பாண்டில் உலகளாவிய பொருளாதார வளா்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகளாவிய பொருளாதார வளா்ச்சி 2.8 சதவீதமாக மதிப்பிடப்பட்ட நிலையில், நடப்பாண்டு சற்று குறைவான வளா்ச்சியே பதிவாகும் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

