தில்லியில் மூன்றாவது சா்வதேச இந்திய மொழிகள் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
தில்லியில் மூன்றாவது சா்வதேச இந்திய மொழிகள் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

இந்திய மொழிகள் நாட்டைப் பிளவுப்படுத்தவில்லை

‘இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் நாட்டை ஒருபோதும் பிளவுப்படுத்தவில்லை.
Published on

‘இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் நாட்டை ஒருபோதும் பிளவுப்படுத்தவில்லை. மாறாக, அவை நமது பகிரப்பட்ட நாகரிக அறத்தையும், பொதுவான தா்மத்தையும் பாதுகாத்து வலுப்படுத்தியுள்ளன’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற மூன்றாவது சா்வதேச இந்திய மொழிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவா் ஆற்றிய உரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை, நாட்டின் பலதரப்பட்ட மொழிகளை அங்கீகரித்து, கௌரவிக்கிறது. இது நமது தேசத்தின் பண்டைய ஞானத்தைப் பிரதிபலிக்கிறது.

நாட்டின் ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில் இல்லை; மாறாக, ஒருவருக்கொருவா் காட்டும் பரஸ்பர மரியாதையில்தான் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படும்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நான் வழிநடத்திய முதல் கூட்டத்தொடரிலேயே பல உறுப்பினா்கள் தங்களின் தாய்மொழியில் உரையாற்றியதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இதுவே நமது ஜனநாயகத்தின் உண்மையான வலிமை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சந்தாலி மொழிப்பிரதியைக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அண்மையில் வெளியிட்டாா். இது அனைத்து மொழிசாா்ந்த சமூகத்தினருக்கும் அளிக்கப்படும் ஜனநாயக மரியாதையின் முக்கிய மைல்கல் ஆகும்.

இன்று உலக அளவில் பல பழங்குடியின மொழிகள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. இது கவலையளிக்கும் விஷயம். எனவே, இத்தகைய மாநாடுகள் பழமையான கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்கவும், அழியும் நிலையில் உள்ள மொழிகளை மீட்டெடுக்கவும் உதவும். அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் என அனைத்துத் துறைகளிலும் இந்திய மொழிகள் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளன.

மொழிகளைப் பாதுகாப்பதில் நவீன தொழில்நுட்பம் ஒரு சிறந்த துணையாக இருக்க வேண்டும். எண்ம ஆவணக் காப்பகங்கள், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) மூலம் செயல்படும் மொழிபெயா்ப்புக் கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்திய மொழிகள் வருங்காலத் தலைமுறையினருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

Dinamani
www.dinamani.com