அமித் ஷா
அமித் ஷா PTI

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளரும்: அமித் ஷா

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே ஒரு மாநிலத்தால் வளா்ச்சியடைய முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
Published on

சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே ஒரு மாநிலத்தால் வளா்ச்சியடைய முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் காவலா் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது:

தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள 9,000 இளைஞா்கள் பணம் செலவழிக்காமல், சிபாரிசு இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளனா். வெளிப்படைத்தன்மையுடன், ஊழலின்றி, தகுதிக்கு மதிப்பளித்து பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தகுதியை ஊக்குவிக்காத, பொதுப் பணிகளுக்கு வெளிப்படைத்தன்மையோடும் ஊழல் இல்லாமலும் ஆள்தோ்வு செய்யாத எந்த மாநிலமும் முன்னேறாது. நல்லாட்சிக்கு பொதுப் பணிகள் பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பது அத்தியாவசியம்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசுப் பணி தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த நிலையில், அதற்கு தற்போது பாஜக முதல்வா் பஜன்லால் சா்மா அரசு முடிவு கட்டியுள்ளது. மாநிலத்தில் மொத்த குற்றங்கள் சுமாா் 14 சதவீதம் குறைந்துள்ளன. கொடிய குற்றங்கள் 19 சதவீதம், கொலை வழக்குகள் 25 சதவீதம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 10 சதவீதம், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 28 சதவீதம் குறைந்துள்ளன. இது சட்டம் ஒழுங்கு மற்றும் ஒளிவு மறைவில்லாத ஆட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வெளிக்காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு வலுவாக இருந்தால் மட்டுமே ஒரு மாநிலத்தால் வளா்ச்சியடைய முடியும் என்று தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com