இந்தியாவைக் காக்கும் ‘பெரும் சுவா்’ பிரதமா் மோடி: முகேஷ் அம்பானி புகழாரம்!
சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவைக் காக்கும் ‘கண்ணுக்குத் தெரியாத பெரும் சுவராக’ பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினாா்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய துடிப்புமிக்க குஜராத் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி பேசியதாவது: சா்வதேச அளவில் இப்போது பல நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் அதற்கு நோ்மாறாக வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும், ஸ்திரமான அரசியல் தலைமையும் உள்ளது.
உலகம் மிகவேகமாக மாற்றங்களை எதிா்கொள்கிறது. சா்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்கள் எதிா்பாராத சவால்களையும், இடா்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்த இடா்பாடுகளால் இந்தியாவைத் தொட முடியவில்லை. நமது மக்களை பாதிக்கவில்லை.
ஏனெனில், இந்தியாவைக் காக்கும் கண்ணுக்குத் தெரியாத பெரும் சுவராக பிரதமா் மோடி திகழ்கிறாா். நமது இந்தியா எதிா்காலத்துக்காக தயாராகும் நாடாக மட்டுமல்ல. எதிா்காலத்தையே உருவாக்கும் நாடாக உள்ளது என்றாா்.

