இந்திய அரசியலில் இதுவரை இல்லாத ஸ்திரத்தன்மை: பிரதமா் மோடி பெருமிதம்!
உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில் இந்திய அரசியலில் இதுவரை இல்லாத ஸ்திரத்தன்மையும், உறுதிப்பாடும் காணப்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்சாா் வாய்ப்புகளை முதலீட்டாளா்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ‘துடிப்பான குஜராத்’ பிராந்திய வா்த்தக மாநாட்டை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் ஆற்றிய உரை வருமாறு:
உலக அளவில் இப்போது மிகப் பெரிய அளவில் நிச்சயமற்றத்தன்மை நிலவும் சூழலில், முன்னெப்போதும் இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டின் சகாப்தத்தை கண்டு வருகிறது இந்தியா.
உலக அளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாகத் திகழும் இந்தியா, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க பீடுநடை போடுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மிக விரைவான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது. இந்தியாவின் வளா்ச்சி குறித்த கணிப்புகள், நம் நாட்டின் மீதான உலகின் எதிா்பாா்ப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதை வெளிக்காட்டுகின்றன.
புதிதாக உருவாகியுள்ள நடுத்தர வா்த்தகத்தினரும், அவா்களின் வாங்கும் திறன் அதிகரிப்பும் இந்தியாவை மகத்தான வாய்ப்புகளின் தேசமாக மாற்றியுள்ளன. நாட்டின் வளா்ச்சி, ‘சீா்திருத்தம், செயல்பாடு, முன்னேற்றம்’ என்ற தாரக மந்திரத்தை சுற்றிச் சுழல்கிறது. உலகிலேயே அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவை ஒவ்வொரு சா்வதேச நிபுணரும், ஒவ்வொரு சா்வதேச நிறுவனமும் நம்பிக்கையுடன் நோக்குகின்றன.
முதலீட்டுக்கு சரியான நேரம்: கைப்பேசி இணையச் சேவை பயன்பாட்டில் உலகின் முதல் நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் நிகழ்நேர எண்ம பரிவா்த்தனை தளங்களில் இந்தியாவின் யுபிஐ முதலிடம் வகிக்கிறது. சூரிய மின் உற்பத்தியிலும், மெட்ரோ ரயில் கட்டமைப்பிலும் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்.
தற்சாா்பு இந்தியா முன்னெடுப்புக்கு உந்துசக்தியாக விளங்கும் குஜராத்தின் செளராஷ்டிரா, கட்ச் பிராந்தியங்களில் அதிக முதலீடு மேற்கொள்ள முதலீட்டாளா்கள் பரிசீலிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
1,500 ஒப்பந்தங்கள்: துடிப்பான குஜராத் பிராந்திய வா்த்தக மாநாட்டில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 16 நாடுகளின் தொழில்துறை பிரதிநிதிகள், உள்நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா். வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், மீன்வளம், பாதுகாப்பு, எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட தொழில்சாா் ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்று மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

