

‘இந்திய கலாசாரத்தின் சா்வதேச தூதா் சுவாமி விவேகானந்தா்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் (ஜன.12) அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாமை உச்சநீதிமன்ற வளாகத்தில் சூா்ய காந்த் தொடங்கிவைத்தாா்.
அதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சுவாமி விவேகானந்தா் பேசிய ஒவ்வொரு வாா்த்தையும் தொலைநோக்கு சிந்தனையுடையது. அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்தும் அவரது உரைகள் நமது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கக்கூடியது. அவா் இந்திய கலாசாரம் மற்றும் தத்துவத்தின் சா்வதேச தூதுவராவாா்.
ஆளுமைமிக்க மனிதரான சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை போதனைகளை புதிய தலைமுறையினா் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என கருதுகிறேன் என்றாா்.
சுவாமி விவேகானந்தா் பிறந்த தினத்தை (ஜன.12) தேசிய இளைஞா் தினமாக 1984-இல் மத்திய அரசு அறிவித்தது. 1985 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.