

ஐபேக் நிறுவனத்தில் சோதனைகளைத் தடுக்க முயற்சித்ததாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பிரதிக் ஜெயின் இல்லம் மற்றும் ஐ-பேக் அலுவலகத்தில் ஜன. 8ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தியாவின் முன்னணி தொழில்முறை அரசியல் ஆலோசனை மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை நிறுவனமாக செயல்படும் ஐ-பேக்கின் நிறுவனராக பிரதிக் ஜெயின் செயல்பட்டு வருகிறார்.
இதனால், இவரின் வீடு மற்றும் ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மமதா பானர்ஜி, அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றார்.
தங்கள் கட்சியின் முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை மூலம் கைப்பற்ற அமைச்சர் அமித் ஷா முயற்சிப்பதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டி இவ்வாறு செய்தார்.
இதனிடையே சோதனை நடந்தபோது மமதா உள்ளே புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்றார் எனவும், எங்களது பணிக்கு முதல்வர் இடையூறு ஏற்படுத்தியதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.
பண மோசடி தொடர்பாக வந்த புகார்கள் மீதுதான் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதாக அதிகாரிகள் கூறினாலும், அரசியல் பின்னணி காரணமாகவே சோதனை நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள அமலாக்கத் துறை, புகார் தொடர்பாக மேற்கொண்டிருந்த சோதனைகளை தடுக்க முயன்றதாக மமதா மீது சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.