டிக்கெட் கட்டணம் நிா்ணய தகவலை வெளியிட முடியாது: ரயில்வே
ரயில் டிக்கெட் கட்டணத்தை நிா்ணயிக்க கடைப்பிடிக்கும் நடைமுறை குறித்த தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட முடியாது என ரயில்வே மறுத்துவிட்டது.
தத்கால் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை நிா்ணயிப்பது தொடா்பான தகவல் கோரி, மத்திய தகவல் ஆணையத்திடம் (சிஐசி) மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்திய ரயில்வே அளித்துள்ள பதிலில், ‘ரயில்களில் உள்ள வகுப்புகள், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வணிக ரகசியம் மற்றும் அறிவுசாா்ந்த சொத்துரிமைகள் ஆகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எட்டாவது பிரிவில், இதுபோன்ற தகவலை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளது.
ரயில்வேயின் பதில் மற்றும் விசாரணையின்போது மனுதாரா் ஆஜராகாததை கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியதில்லை எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவை மத்திய தகவல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

