தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு அதிக நிவாரணம் வழங்க உத்தரவிடுவோம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு அதிக நிவாரணம் வழங்க உத்தரவிட நேரிடும் என மாநிலங்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசுகள் முறையாகச் செயல்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள நாய்களைப் பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும். அவற்றை மீண்டும் அதே இடத்தில் விடக் கூடாது’ என்று உத்தரவிடப்பட்டது.
இதில் மாற்றங்கள் கோரி விலங்குகள் நல ஆா்வலா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். இதுதொடா்பாக கடந்த சில நாள்களாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு முன் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் நீதிபதி விக்ரம் நாத் கூறியதாவது: குழந்தைகள், மூத்த குடிமக்கள் என இனி தெருநாய்க்கடியால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது படுகாயங்களுக்கு அதிக நிவாரணத் தொகையை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட நேரிடும். ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளாக தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் முறையாக மேற்கொள்ளவில்லை.
ஏன் வீட்டில் வளா்க்கக் கூடாது?: தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபா்களும் நாய்க்கடி சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். தெருநாய்கள் மீது அன்புகொண்டவா்கள் அதை ஏன் வீடுகளில் வளா்க்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினாா்.
அவரது கருத்தை மீண்டும் வலியுறுத்திய சந்தீப் மேத்தா, ‘9 வயது குழந்தையை தெருநாய் கடித்தால் பொறுப்பேற்பது யாா்? இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இந்த விவகாரத்தில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வழக்குரைஞா்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என நீதிபதிகள் அமா்வு கூறியது.

