நமது நிருபர்
தில்லி- என்சிஆர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் நடத்தப்பட்ட சைபர் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய 8 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
அத்துடன், ரூ.15 கோடி மதிப்பிலான சந்தேகத்திற்குரிய நிதிப் பரிவர்த்தனைகளையும் போலீஸார் கண்டறிந்தனர்.
தமிழகப் பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: இந்தக் குற்ற கும்பல் சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சமூக ஊடகங்கள் வழியாக தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. சமூக ஊடகங்கள் மூலம் வங்கி விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. ஓடிபி- க்களைத் தவிர்ப்பதற்காக தீங்கிழைக்கும் ஏபிகே கோப்புகள் இக்கும்பலால் பயன்படுத்தப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், சைபர் மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக பினாமி வங்கிக் கணக்குகளை உள்ளடக்கிய பல அடுக்கு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர். போலீஸார் நடவடிக்கையின்போது ரூ.4.70 லட்சம் ரொக்கம், 14 கைப்பேசிகள், 20 சிம் கார்டுகள் மற்றும் 7 கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 6,000 மோசடியாக மாற்றப்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் (என்சிஆர்பி) அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
கிழக்கு தில்லியில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்ட பயனாளிக் கணக்கை போலீஸார் ஆய்வு செய்ததில், அது காஜியாபாதைச் சேர்ந்த ஒருவரால் இயக்கப்படும் பினாமி கணக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாண்டவ் நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது கூட்டாளிகளும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றக் கும்பலின் பகுதியாக இருந்தனர். பல வங்கிகளில் குறைந்தது 85 பினாமி வங்கிக் கணக்குகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 600-க்கும் மேற்பட்ட என்சிஆர்பி புகார்கள் இவர்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. வங்கி நிதி பரிவர்த்தனை அறிக்கைகள், இணைய வங்கிப் பதிவுகள் மற்றும் ஐபி முகவரிகளை ஒரு குழு ஆய்வு செய்தது.
அதைத் தொடர்ந்து தில்லி, காஜியாபாத், மொராதாபாத், பரேலி, ராம்பூர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் இருந்து எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பினாமி கணக்குகளுக்கு வசதி செய்து கொடுத்து, சைபர் மோசடி மூலம் கிடைத்த பணத்தை திசைதிருப்பி, பின்னர் அதை கிரிப்டோகரன்சியாக, முக்கியமாக யுஎஸ்டிடி (யுஎஸ்டி டெதர்) ஆக மாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், வெளிநாட்டு ஆபரேட்டர்களை கண்டறியவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.