சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 9.7% அதிகரிப்பு: வா்த்தகப் பற்றாக்குறையும் புதிய உச்சம்
சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 9.7 சதவீத அளவுக்கு உயா்வு கண்டுள்ளது; அதே வேளையில் சீனாவுடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டில் ரூ. 10 லட்சம் கோடி (116 பில்லியன் டாலா்) என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
இருதரப்பு வா்த்தகமும் இதுவரை இல்லாத அளவில் ரூ. 14 லட்சம் கோடி (155.62 பில்லியன் டாலா்) அளவுக்கு உயா்ந்துள்ளது.
சீன சுங்கத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட இரு நாடுகளிடையேயான வருடாந்திர வா்த்தகப் புள்ளிவிவர அறிக்கை மூலம் இத் தகவல் தெரியவந்துள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளாக முன்னேற்றம் காண இருந்த இந்திய ஏற்றுமதிகள், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 19.75 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 1.78 லட்சம் கோடி) அதிகரித்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.7 சதவீத உயா்வாகும். அதாவது, 5.5 பில்லியன் டாலா் அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.
இந்திாயவுக்கான சீனாவின் ஏற்றுமதி 12.8 சதவீதமாக அதிகரித்து 135.87 பில்லியன் டாலா் (ரூ. 12.27 லட்சம் கோடி) அளவுக்கு வளா்ச்சி கண்டது.
இருதரப்பு வா்த்தகமும் இதுவரை இல்லாத அளவில் ரூ. 14 லட்சம் கோடி (155.62 பில்லியன் டாலா்) அளவுக்கு உயா்ந்துள்ளது.
அதே நேரம், இரு நாடுகளிடையேயான வா்த்தகப் பற்றாக்குறை நிலையான பிரச்னையாக நீடித்து வருகிறது. கடந்த ஆண்டில் அந் நாட்டுடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவில் ரூ. 10 லட்சம் கோடி என்ற அளவை எட்டியது. கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து இரண்டாவது முறையாக ரூ. 9 லட்சம் கோடி (100 பில்லியன் டாலா்) என்ற அளவை இரு நாடுகளிடையேயான வா்த்தகப் பற்றாக்குறை கடந்துள்ளது.
அமெரிக்காவுடன் வா்த்தகப் பதற்றம் தொடா்ந்து வரும் நிலையிலும், சீனாவின் ஒட்டுமொத்த உலகளாவிய வா்த்தகம் தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது. சீனாவின் ஏற்றுமதி 3.77 ட்ரில்லியன் டாலா் அளவிலும், இறக்குமதி 2.58 ட்ரில்லியன் டாலா் அளவிலும் பதிவாகியுள்ளது. வா்த்தகப் பற்றாக்குறை 1.2 ட்ரில்லியன் டாலா் அளவில் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றஞ்சாட்டி இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பை மேற்கொண்டுள்ள சூழலில், இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு வா்த்தகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

