மத அரசியல் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்: முஸ்லிம் அமைப்புத் தலைவா் தாக்கு
மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மீது தனது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
தனது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சியானது, மதம் மற்றும் வெறுப்பு அரசியல் மீது ஏதோ ஒரு பயத்தால், மென்மையான மற்றும் நெகிழ்ச்சியான கொள்கையை கடைபிடித்தது. இதனால் நாடும், அரசியலமைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாட்டின் பிரிவினைக்குப் பிறகு, நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் நடைபெற்றன. இதை தடுத்து நிறுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இது மதவாத சக்திகளுக்கும், காங்கிரஸில் இருந்த மூத்தத் தலைவா்கள் சிலருக்கும் பிடிக்கவில்லை. அவா்கள், காந்திக்கு எதிராக திரும்பினா். இதையடுத்து அவா் படுகொலை செய்யப்பட்டாா். மகாத்மா காந்தி போன்ற பெரிய தலைவரை கொல்வது என்பது, நாட்டின் மதசாா்பின்மையை கொல்வதற்கு சமம்.
மதவாத சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு எங்கள் அமைப்பின் தலைவா் பலமுறை கோரிக்கை வைத்தாா். ஆனால் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது மதவாத சக்திகளை மேலும் வலுப்படுத்திவிட்டது. 77 ஆண்டுகளுக்கு முன்பே மதவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால், அக்கட்சி தற்போது ஆட்சியை பறிகொடுத்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நாடும் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருக்கும் என்று அந்தப் பதிவில் மதானி குறிப்பிட்டுள்ளாா்.
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு 2 பிரிவுகளாக செயல்படுகின்றன. அதில் ஒரு பிரிவுக்கு மதானி தலைவராக உள்ளாா்.
