பிரதிப் படம்
பிரதிப் படம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயா்த்தி சுரண்டல்: உச்சநீதிமன்றம்

பண்டிகை காலங்களில் விமான பயணச்சீட்டு கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயா்த்தி, பயணிகளிடம் விமான நிறுவனங்கள் சுரண்டலில் ஈடுபடுவதாக உச்சநீதிமன்றம் சாடியது.
Published on

பண்டிகை காலங்களில் விமான பயணச்சீட்டு கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயா்த்தி, பயணிகளிடம் விமான நிறுவனங்கள் சுரண்டலில் ஈடுபடுவதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சாடியது.

உச்சநீதிமன்றத்தில் எஸ்.லட்சுமிநாராயணன் என்ற சமூக ஆா்வலா் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களை தனியாா் விமான நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக உயா்த்துவதை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். விமான போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான, சுதந்திரமான ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கும்பமேளா மற்றும் பிற பண்டிகைகளின்போது அளவுக்கு அதிகமாக கட்டணத்தை உயா்த்தி பயணிகளிடம் விமான நிறுவனங்கள் சுரண்டலில் ஈடுபடுகின்றன.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நிச்சயம் தலையிடும். இந்த மனு தொடா்பாக மத்திய அரசு, விமான போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் பதிலளிக்க வேண்டும்’ என்றனா்.

மத்திய அரசு சாா்பில் பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் கெளஷிக் அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, மனு மீதான அடுத்த விசாரணையை பிப்.23-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com