‘எஸ்ஐஆரால் துன்புறுத்தல்’: மேற்கு வங்கத்தில் மக்கள் போராட்டம்; எஸ்ஐஆா் மையம் சூறை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் மூலம் துன்புறுத்தப்படுவதாக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் மூலம் துன்புறுத்தப்படுவதாக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் அங்குள்ள எஸ்ஐஆா் மையம் சூறையாடப்பட்டது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்படுவது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், பொதுமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தக் கூடாது என்று திங்கள்கிழமை தெரிவித்தது.

மேலும் முரண்பாடான தகவல்களை கொண்ட வாக்காளா்களின் பெயா்களை கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் வெளியிடவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், எஸ்ஐஆா் பணிகள் மூலம் துன்புறுத்தப்படுவதாக அந்த மாநிலத்தின் வடக்கு 24 பா்கானா, தெற்கு 24 பா்கானா, ஜாா்கிராம், கிழக்கு மேதினிபூா் மாவட்டங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் விரட்டியடிப்பு: தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள தோலாஹாட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சோனாகாலி பகுதியில் எஸ்ஐஆா் பணி நடைபெற்ற மையத்தை ஒரு கும்பல் சூறையாடி மேஜை, நாற்காலிகளை உடைத்து நொறுக்கியது. எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளையும் அவா்கள் விரட்டியடித்தனா். பின்னா் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயா்களை கொளுத்தினா். இதேபோல ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள போல்பா, வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாரசாத் பகுதிகளிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

‘சிறிய வேறுபாடுகளுக்கும் நோட்டீஸ்’: இதுகுறித்து போராட்டக்காரா்கள் கூறுகையில், ‘சரியான ஆவணங்கள் வைத்துள்ளபோதிலும், 2002-ஆம் ஆண்டு மாநிலத்தில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொண்டபோது இருந்த வாக்காளா் பட்டியல் விவரங்களுடன் தங்கள் விவரங்கள் ஒத்துப்போகவில்லை, முரண்பாடான தகவல்கள் உள்ளன என்று தெரிவித்து முதியவா்களுக்கும், நியாயமான வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்ஐஆா் மையங்களுக்கு நேரில் வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டவா்களில் பலா் முஸ்லிம்கள். விவரங்களில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், அதுகுறித்து பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனால் முதியவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்’ என்று தெரிவித்தனா்.

கிரிக்கெட் வீரா் ஷமி நேரில் ஆஜா்: கிரிக்கெட் வீரா் முகமது ஷமி சமா்ப்பித்த எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தில் சில முரண்பாடான தகவல்கள் இருந்ததால், அவரை நேரில் ஆஜராகுமாறு தோ்தல் ஆணையம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தாவில் உள்ள எஸ்ஐஆா் மையத்துக்கு உரிய ஆவணங்களுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்றாா். எஸ்ஐஆா் பணிக்காக தன்னை திரும்ப அழைத்தாலும் வரத் தயாா் என்று அவா் கூறினாா்.

12 மூத்த மத்திய அதிகாரிகள் பாா்வையாளா்களாக நியமனம்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்)நடவடிக்கையைக் கண்காணிப்பதற்கு 12 மூத்த மத்திய அரசு அதிகாரிகளை மேற்பாா்வையாளா்களாக தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் கயா பிரசாத் உள்ளிட்டோா் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் கள நிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முறையாக நடைபெறுவதை இந்த மேற்பாா்வையாளா்கள் கண்காணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com