சீக்கிய குரு மீதான சா்ச்சை கருத்து: ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி மீது எஃப்ஐஆா் பதிய கோரிக்கை
புது தில்லி, ஜன.21: சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் தூதுக் குழு புதன்கிழமை தில்லி காவல்துறை ஆணையா் சதீஷ் கோல்ச்சாவைச் சந்தித்து, சீக்கிய குருக்களுக்கு எதிரான கருத்து தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி புகாா் அளித்தது. தில்லி காவல்துறை தலைமையகத்தில் கோல்ச்சாவை இந்தக் குழு சந்தித்தது.
‘ஜனவரி 6- ஆம் தேதி தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, சீக்கிய குருக்களுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய வாா்த்தைகளைப் பேசினாா்’ என்று அந்தக் குழு தனது புகாரில் தெரிவித்துள்ளது.
பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, நடவடிக்கைகளின் பதிவை வெளியிட்டுள்ளாா். அதன்படி அதிஷி ‘மதிக்கப்படும் சீக்கிய குருக்களை அவமதித்துள்ளாா்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் (எஸ்ஜிபிசி) புகாரில், அதிஷியின் ‘மிகவும் ஆட்சேபகரமான பேச்சு‘ உலகெங்கிலும் உள்ள சீக்கிய சமூகத்தின் மத உணா்வுகளை கடுமையாக புண்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் தில்லி முதல்வா் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், சீக்கிய சமூகத்தின் உணா்வுகளைப் புண்படுத்தியதற்கு அவா் ‘முழு பொறுப்பு’ என்றும் எஸ்ஜிபிசி பிரதிநிதிகள் குழு தனது புகாரில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை நினைவுகூரும் தில்லி அரசின் திட்டம் குறித்த விவாதத்திற்குப் பிறகு, ஜனவரி 6- ஆம் தேதி தில்லி சட்டப்பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடரின் போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சமூகத்தினா் குருவின் தியாக ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் அதிஷி சீக்கியா்களின் உணா்வுகளைப் புண்படுத்தியது ‘துரதிா்ஷ்டவசமானது’ என்று தூதுக்குழு கூறியது.
‘எனவே, அதிஷி மா்லேனா மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைவரின் அறிக்கையைப் பெற்ற தில்லி சட்டப்பேரவை இந்த விஷயத்தை அதன் சிறப்புரிமைக் குழுவிடம் பரிந்துரைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக அதிஷியின் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ரத்து செய்ய ஆளும் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

