

மத்தியப் பிரதேசத்தில், 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், போபால் நகர் மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போபால் நகரத்தில், கடந்த 2025 டிசம்பர் 17 அன்று 26.5 டன் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லாரியில் கொண்டுவரப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி எனக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மதுராவில் உள்ள அரசு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது பசுவின் இறைச்சி என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும், அவர்களுக்கு சொந்தமான இடங்களை புல்டோசர் மூலம் இடித்து தகர்க்குமாறும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மாநகராட்சியின் பாதுகாப்பின் கீழ் இறைச்சிக் கூடத்தில் பசுக்கள் கொல்லப்படுவதாகக் குற்றம்சாட்டிய பஜ்ரங் தள் அமைப்பினர் போபால் மேயர் மால்தி ராயின் வீட்டை இன்று (ஜன. 21) முற்றுகையிட்டனர்.
போபாலைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான மேயர் மால்தி ராயின் புகைப்படத்தில் கருப்பு சாயம் பூசியும், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விவகாரம் அங்கு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.