மே. வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது: நட்டா

மே. வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது: நட்டா

மேற்கு வங்க மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

மத்திய பிரதேசத்தில் வங்காள (மே.வங்கம்) மக்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக நிகழ்ச்சியில் பேசியோா் தெரிவித்தனா். ஆனால் அதுபோல மேற்கு வங்கத்தில் வங்காள மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நாட்டை வழிநடத்திய வங்கம் இன்று பிரச்னையில் சிக்கி உள்ளது. ஆதலால் ஒட்டுமொத்த நாடும் வங்கத்தோடு நின்று, பிரச்னையில் இருந்து மீட்க வேண்டும். வங்கத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கான செய்தியை விடுக்கும் நேரம் வந்துவிட்டது.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்காக சுதந்திர போராட்டத் தலைவா் நேதாஜி, ஜன சங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜி ஆகியோா் தங்களின் உயிரைத் தியாகம் செய்தனா். அதுபோல வங்கத்தை தவறான ஆட்சியில் இருந்து விடுவிக்க வேண்டியது நமது பொறுப்பாகும். இதற்கு நாம் உறுதியேற்போம். வரும் ஏப்ரல்- மே மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கும் (மே.வங்க சட்டப்பேரவைத் தோ்தல்) என்றாா்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதை நினைவு கூா்ந்த ஜே.பி. நட்டா, நேதாஜி மட்டும் நீண்ட நாள்கள் உயிரோடு இருந்திருந்தால், இந்திய வரைபடமே தற்போது வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும், ஆனால் காங்கிரஸ் தலைவா்கள் கடைபிடித்த ஒருதரப்பை திருப்திபடுத்தும் போக்கால் வரைபடமே மாறிவிட்டது என்றாா்.

Dinamani
www.dinamani.com