

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை அவமதித்ததாக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யக் கோரி பாஜக, ஜேடி(எஸ்) கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் இந்தாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த ஜன. 22-ல் தொடங்கியது. மரபுப்படி மாநில ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆனால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல் அவர் சொந்தமாகத் தயாரித்த உரையை வாசிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில் உரையை வாசிக்காமல் பேரவையைவிட்டு ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
இதைக் கண்டித்து, விதான் சௌதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சியான பாஜக, ஜேடி(எஸ்) கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் மாநிலத்தில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லாததைக் குறிப்பிட்டு, கலால் துறையில் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் கலால் துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாபூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இந்தப் போராட்டத்தில், சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவர்களான ஆர். அசோகா மற்றும் சலவாடி நாராயணசாமி, மாநில பாஜக தலைவர் பி. ஒய். விஜயேந்திரா, பாஜக சட்ட மேலவை உறுப்பினர் சி. டி. ரவி, ஜேடி(எஸ்) மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.