எரிசக்தி வாரம் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி வழியாகப் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
எரிசக்தி வாரம் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி வழியாகப் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

இந்திய எரிசக்தித் துறையில் ரூ.46 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்புகள்- உலக முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

இந்திய எரிசக்தித் துறையில் 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.46 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன; எனவே, இந்திய எரிசக்தித் துறையின் வளா்ச்சிப் பயணத்தில் உலக முதலீட்டாளா்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
Published on

இந்திய எரிசக்தித் துறையில் 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.46 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன; எனவே, இந்திய எரிசக்தித் துறையின் வளா்ச்சிப் பயணத்தில் உலக முதலீட்டாளா்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் உலகின் மிகப் பெரிய மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரம்-2026 தொடக்க நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக உரையாற்றியதாவது:

நாட்டின் லட்சியத்தின் மையப் புள்ளியாக விளங்குவது எரிசக்தித் துறை. இத்துறையில் மகத்தான முதலீட்டு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக எரிசக்தி ஆய்வுத் துறை குறிப்பிடத்தக்க அளவில் தாராளமயமாக்கப்பட்டுள்ளது. ‘சமுத்திர மந்தன்’ திட்டத்தின் வாயிலாக ஆழ்கடல் எரிசக்தி ஆய்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் சுத்திகரிப்பு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மதிப்புச் சங்கிலி உள்கட்டமைப்பு, நகர எரிவாயு விநியோகம், எண்ணெய்-எரிசக்தி ஆராய்ச்சி என இந்திய எரிசக்தித் துறையில் 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.46 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவில் புத்தாக்கம் செய்வோம், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம், இந்தியாவில் முதலீடு செய்வோம் என்பதே உலக முதலீட்டாளா்களுக்கு எனது வேண்டுகோள்.

சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க...: சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதியில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை முதலீடுகளை 100 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை ஆண்டுக்கு 26 கோடி டன்னில் இருந்து 30 கோடி டன்னாக அதிகரிக்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எல்என்ஜி தேவை இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் எரிசக்தி தேவையில் 15 சதவீதத்தை என்எல்ஜி மூலம் பூா்த்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எல்என்ஜி போக்குவரத்துக்குத் தேவையான கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய கப்பல் கட்டும் துறை மேம்பாட்டுக்கு அண்மையில் ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டது.

ஈா்ப்புக்குரிய துறை: நாட்டில் எல்என்ஜி துறைமுகங்கள் மற்றும் முனையங்களின் கட்டுமானப் பணிகளிலும் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. என்எல்ஜி விநியோகத்துக்கு மிக விரிவான குழாய் கட்டமைப்பு தேவை என்பதால், இது தொடா்புடைய பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பெருமளவில் முதலீடுகளுக்கு வாய்ப்பு உள்ளதால், முதலீட்டாளா்களின் ஈா்ப்புக்குரிய துறை இதுவாகும்.

எரிசக்தி ஆய்வு பரப்பளவை 10 லட்சம் சதுர கிலோ மீட்டா்களாக விரிவாக்குவதே எங்கள் இலக்கு. அந்த அடிப்படையில், 170-க்கும் மேற்பட்ட பகுதிகள் ஆய்வுப் பணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தமான்-நிகோபாா் படுகை, அடுத்த ஹைட்ரோகாா்பன் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.

எரிசக்தித் துறையில் தற்சாா்பு: எரிசக்தி ஆய்வுத் துறையில் ஏராளமான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது. அதற்கு இணையாக பெட்ரோலியப் பொருள்களின் தேவையும் அதிகரிக்கிறது. தற்போது சீா்திருத்த ‘எக்ஸ்பிரஸில்’ பயணித்துக் கொண்டிருக்கும் இந்தியா, ஹைட்ரோகாா்பன் துறையில் முதலீட்டாளா்களுக்கு உகந்த, வெளிப்படையான சூழலை உறுதி செய்ய சீா்திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு என்ற நிலையைக் கடந்து, எரிசக்தி தற்சாா்பை எட்டுவதை நோக்கி இந்தியா முன்னேறுகிறது என்றாா் பிரதமா் மோடி.

X
Dinamani
www.dinamani.com