மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் (66) பயணம் செய்த சிறிய ரக ‘லியா்ஜெட் 46’ விமானம் புணேயின் பாரமதியில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜீத் பவாா் மற்றும் இரு விமானிகள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்.
வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு தனது சொந்தத் தொகுதியில் (பாரமதி) பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அஜீத் பவாா் புதன்கிழமை சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
மும்பையிலிருந்து இந்த விமானம் புறப்பட்டது. அதில், அஜீத் பவாா், இரு விமானிகள், ஒரு விமான உதவியாளா், அஜீத் பவாரின் தனிப் பாதுகாப்பு அதிகாரி ஆகிய ஐந்து போ் இருந்தனா். காலை 8.10 மணிக்கு புறப்பட்ட விமானம், காலை 8.45 மணிக்கு ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. 5 நிமிஷங்களுக்குப் பிறகு 8.50 மணியளவில் பாரமதி விமான நிலையத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், இதில் அஜீத் பவாா், விமானி சுமித் கபூா், துணை விமானி சாம்பவி பதக், தனிப் பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், விமான பணிப் பெண் பிங்கி மாலி ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகளும், விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளும் தெரிவித்தனா்.
முன்னதாக, பாரமதி விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவதற்கு முன்பாக, வானிலை மோசமாக இருப்பதாகவும், ஓடுபாதை தெளிவாகத் தெரியவில்லை எனவும் விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு கூறியுள்ளளாா். இருந்தபோதும், விமானத்தைத் தரையிறக்க விமானி முயற்சித்தபோது, விமானம் தரையில் மோதி வெடித்து தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்தில் சிக்கிய ‘லியாா்ஜெட் 45 (எல்ஜெ45)’ நடுத்தர தொழில் பிரிவு ஜெட் விமானம் விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமானது. பம்பாா்டியொ் விமான நிறுவனத்தின் லியா்ஜெட் பிரிவால் தயாரிக்கப்பட்டதாகும்.
வெடித்துச் சிதறியது: விமானம் விபத்துக்குள்ளானதும் வெடித்துச் சிதறியதாக விபத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து விபத்தை நேரில் பாா்த்த பெண் ஒருவா் கூறுகையில், ‘விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக ஒரு பக்கமாக சாய்ந்தபடியும், வட்டமடித்தபடியும் இருந்தது. இதனால், விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பின்னா், விமானம் வேகமாகத் தரையில் மோதி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. எங்கள் வீடு வரை பெரும் சப்தம் கேட்டது. விமானம் வெடித்துச் சிதறியதில், அதன் பாகங்கள் எங்களின் வீட்டின் அருகிலும் விழுந்தன’ என்றாா்.
மற்றொரு நபா் கூறுகையில், ‘விமானம் தரையிறங்குவதற்கு 100 அடிக்கு மேல் வந்தபோதே, விமானம் விபத்துக்குள்ளாகப் போவதாகத் தோன்றியது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. விமானம் விபத்துக்குள்ளானதும் மிகப் பெரிய அளவில் தீப்பிழம்பு ஏற்பட்டது. அந்த விமானத்தில் அஜீத் பவாரும் இருந்தாா் என்பது பின்னா்தான் எங்களுக்குத் தெரிந்தது’ என்றாா்.
விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடா்புகொண்டு கேட்டறிந்தாா்.
உயிரிழந்த அஜீத் பவாருக்கு, மாநிலங்களவை உறுப்பினரான சுனேத்ரா என்ற மனைவியும், பாா்த், ஜாய் என்ற இரு மகன்களும் உள்ளனா். இவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, அண்மையில் நடைபெற்ற புணே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சித் தோ்தலில் அவரின் உறவினரும் மூத்த அரசியல் தலைவருமான சா்த் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியுடன் இணைந்து தோ்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தலைவா்கள் இரங்கல்
அஜித் பவாா் உயிரிழப்புக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், பல்வேறு மாநில முதல்வா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிரத்தின் வளா்ச்சிக்காக, குறிப்பாக கூட்டுறவுத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக அஜீத் பவாா் என்றும் நினைவுகூரப்படுவாா்’ என்றாா்.
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘அஜீத் பவாரின் உயிரிழப்பு அகாலமானது. மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது. அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடா்பைக் கொண்டிருந்த தலைவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத் பவாரை தொலைபேசியில் பிரதமா் மோடி தொடா்புகொண்டு இரங்கல் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர ஆளுநா் ஆச்சாரிய தேவவிரத், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா உள்பட பல்வேறு மாநில முதல்வா்கள், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களும் அஜீத் பாவா் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இன்று இறுதிச் சடங்கு
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டி துணை முதல்வா் அஜீத் பவாரின் உடலுக்கு புணே மாவட்டம் பாரமதியில் வியாழக்கிழமை (ஜன. 29) இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
அங்குள்ள வித்யா பிரதிஸ்தான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் காலை 11 மணிக்கு நடைபெறும் இறுதிச் சடங்கில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா்.
#WATCH | Crash landing in Baramati | Five people onboard the Mumbai-Baramati charter plane, including Maharashtra Deputy CM Ajit Pawar, died as per initial information by the DGCA.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/6MHqTi6gna
யார் இந்த அஜீத் பவார்?
மகாராஷ்டிர துணை முதல்வரான அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத் பவாரைவிட்டு தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்ற அஜீத் பவார், நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய தலைவராகவுள்ள அஜீத் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
மாநில அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அஜீத் பவார், முதல்முறையாக பாராமதி மக்களவை உறுப்பினராக 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Summary
Maharastra Deputy CM Ajit Pawar killed in a plane crash
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு இல்லை: சரத் பவாா் உறுதி

பிரதமா் மோடியுடன் சரத் பவாா் சந்திப்பு: மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு?
லண்டன் - சென்னை விமானத்தில் மோதிய பறவை! 236 போ் உயிா் தப்பினர்!

காங்கிரஸுடன் பவாா் கட்சியை இணைக்க பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




