

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான சண்டீகரில், இன்று (ஜன. 28) ஒரே நாளில் 30 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டீகரின் 22 தனியார் பள்ளிகள் மற்றும் 8 அரசுப் பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உண்டான நிலையில், உடனடியாக அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டு காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து உள்ளூர் காவல் துறை, வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்புத் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் அங்கு விரைந்தனர். பின்னர், அந்தப் பள்ளிகளின் வளாகங்கள் முழுவதும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்துடன், இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளதால், நாளை (ஜன. 29) முதல் பள்ளிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டு சிறப்புக் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.